தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2,708 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக, ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) கடந்த 2025 டிசம்பர் 27 அன்று போட்டித் தேர்வை நடத்தியது. 48 பாடப்பிரிவுகளுக்காக நடைபெற்ற இந்தத் தேர்வில் சுமார் 42,000 தேர்வாளர்கள் பங்கேற்றனர். கடந்த 25.06.2026 அன்று வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகள் பல்வேறு சந்தேகங்களையும் குழப்பங்களையும் ஏற்படுத்தியுள்ளன.
150 மதிப்பெண்களுக்கான பாடத் தேர்வும், 50 மதிப்பெண்களுக்கான விளக்கவுரை (Descriptive) தேர்வும் நடத்தப்பட்ட நிலையில், தமிழ்த் துறையில் 150-க்கு 111 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்த தேர்வாளருக்கு விளக்கவுரைத் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், கணினி அறிவியல் துறையில் 107/150 மதிப்பெண்கள் பெற்றவருக்கு 1/50 மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது. மறுபுறம், இயற்பியல் துறையில் 54/150 மதிப்பெண்கள் பெற்றவருக்கு விளக்கவுரைத் தேர்வில் 49/50 வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, 43 பாடப்பிரிவுகளில் பாடத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு விளக்கவுரையில் மிகக் குறைந்த மதிப்பெண்களும், குறைவான மதிப்பெண் பெற்றவர்களுக்கு அதிக மதிப்பெண்களும் வழங்கப்பட்டிருப்பது தேர்வு மதிப்பீட்டு முறையின் நம்பகத்தன்மை குறித்து பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், 8.25, 24.75 போன்ற தசம மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருப்பதும், எந்த அடிப்படையில் இவ்வாறு மதிப்பீடு செய்யப்பட்டது என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. இதன் காரணமாக பல தேர்வாளர்களின் தரவரிசை பல நூறு இடங்கள் வரை மாறியுள்ளதாக கூறப்படுகிறது.
உதவிப் பேராசிரியர் பணிக்காக தமிழக இளைஞர்கள் பல ஆண்டுகளாக கடுமையாக உழைத்து தயாராகி வருகின்றனர். எனவே, இந்தத் தேர்வு மதிப்பீட்டில் ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கு வெளிப்படையான விளக்கம் அளிக்க வேண்டும். விளக்கவுரைத் தேர்வின் மதிப்பீட்டு முறையை முழுமையாக ஆய்வு செய்து, தேவையெனில் மறு மதிப்பீடு மேற்கொள்ள தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், 2024 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையில் 4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், தற்போது 2,708 பணியிடங்களுக்கு மட்டுமே தேர்வு நடத்தப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் சென்னை உயர்நீதிமன்றமும் அனைத்து 4,000 பணியிடங்களையும் ஆறு மாதங்களுக்குள் நிரப்புமாறு உத்தரவிட்டுள்ளது. எனவே, மீதமுள்ள பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வீ த லீடர் இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.