தமிழகத்தைச் சேர்ந்த மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கப்பட்ட விவகாரத்தில், மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற தாங்கள் முன்வைத்த சந்தேகத்தை, தமிழக சுகாதாரத்துறை அமைச்சரே உறுதிப்படுத்தியுள்ளதாக வீ த லீடர் இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விவகாரத்தில் தமிழக அரசு நீதிமன்றத்தை அணுக உள்ளதாக அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என்றாலும், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் தடையில்லாச் சான்றிதழ் (NOC) வழங்காத நிலையில், பல்கலைக்கழக மானியக் குழு விதிகளின்படி 60 நாட்களுக்குள் தேவையான நடவடிக்கை எடுக்காததற்கு யார் பொறுப்பு என்பது குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இந்த நிர்வாக அலட்சியத்தால் மாநில ஒதுக்கீட்டில் 650 மருத்துவ இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, இந்த விவகாரத்தில் முழுமையான விசாரணை நடத்தி, தவறுக்கு காரணமான அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மாணவர்களின் எதிர்காலத்தை பாதித்த இந்த விவகாரத்தை பொறுப்பேற்பின்றி கடந்து செல்லக் கூடாது என்றும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.