தமிழக அமைச்சரின் பதவி விலகலை வலியுறுத்தி, தூத்துக்குடியில் திங்கள்கிழமை நடைபெற்ற திமுக மாணவரணி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 125 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தமிழக அமைச்சர் சரத்குமார் தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியான பழைய காணொளி அண்மையில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து அமைச்சர் விளக்கம் அளித்திருந்தாலும், அதுவும் விவாதத்திற்கு உள்ளான நிலையில், அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தி மாநிலம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் திமுக மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் நடத்த காவல் துறையினர் அனுமதி மறுத்தனர். எனினும், திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் கீதா ஜீவன் மற்றும் தெற்கு மாவட்டச் செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோரின் அறிவிப்பின்படி, டூவிபுரம் 5-வது தெருவில் மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வடக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வழக்கறிஞர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் யூனியன் கவுன்சிலர் இரா. அந்தோணி தனுஷ்பாலன் உள்ளிட்ட ஆண், பெண் மாணவரணி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு, அமைச்சர் பதவி விலகக் கோரி முழக்கங்களை எழுப்பினர்.
அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக, தூத்துக்குடி துணைக் காவல் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) சுனில் தலைமையில், ஆய்வாளர் வேல்ராஜ் உள்ளிட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு, ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற சுமார் 125 பேரை கைது செய்து காவல் வாகனங்களில் அழைத்துச் சென்றனர்.
அப்போது போலீஸாருக்கும் திமுகவினருக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.