காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே உள்ள ஒரு அரசுப் பள்ளி வகுப்பறையில், ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் முதலமைச்சர் விஜய் புகைப்படத்தை வகுப்பறை சுவரில் மாட்டி, அதனை வீடியோ மற்றும் ரீல்ஸ் வடிவில் சமூக வலைதளங்களில் வெளியிட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து "வீ த லீடர்" இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அரசுப் பள்ளிகள் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கான இடமாக இருக்க வேண்டுமே தவிர, அரசியல் விளம்பரங்களுக்கான களமாக மாற்றப்படக் கூடாது. ஆளுங்கட்சியினர் என்பதற்காக பள்ளி வளாகங்களுக்குள் சென்று வகுப்புகளுக்கு இடையூறு ஏற்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், "அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு, கல்வித் தரம் மற்றும் மாணவர்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதில் பள்ளிக் கல்வித் துறை முழு கவனம் செலுத்த வேண்டிய நேரத்தில், இதுபோன்ற நடவடிக்கைகள் கல்வி சூழலை பாதிக்கும் வகையில் உள்ளன" என்றும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், "முதலமைச்சர் விஜய் இதுபோன்ற செயல்களை ஏற்றுக்கொள்ள மாட்டார் என்று நம்புகிறோம். இனி வரும் காலங்களில் அரசுப் பள்ளிகளில் எந்தவித அரசியல் நடவடிக்கைகளும் நடைபெறாத வகையில் கட்சியினருக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்" என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக கல்வித் துறை அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி, பள்ளிகளின் கல்விச் சூழலை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.