கோவில்பட்டி பணிமனையிலிருந்து பசுவந்தனை வழியாக கப்பிகுளம் கிராமத்திற்கு தடம் எண் 84-ல் இயக்கப்படும் பேருந்திற்கு பதிலாக புதிய அரசுப் பேருந்து இயக்கப்பட்டதைத் தொடர்ந்து, கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கப்பிகுளம் கிராமத்திற்கு தினமும் இரண்டு சுற்றுகள் இயக்கப்பட்டு வந்த பழைய பேருந்தின் மேற்கூரை சேதமடைந்திருந்ததால், புதிய பேருந்து இயக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து, அண்மையில் சென்னை நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் தொடங்கி வைத்த புதிய பேருந்து, வெள்ளிக்கிழமை முதல் கப்பிகுளம் வழித்தடத்தில் இயக்கப்பட்டது.
கிராமத்திற்கு வந்த புதிய பேருந்தை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயக்கனி அரிச்சந்திரன் தலைமையில் கிராம மக்கள் வரவேற்றனர். அப்போது பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கு சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டதுடன், பேருந்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் டாக்டர் அம்பேத்கர் கல்வி அறக்கட்டளை தலைவர் பெருமாள்சாமி, ஊர் பெரியவர்கள் கருப்பசாமி, ஜெயசிங், சமூக செயற்பாட்டாளர் கப்பிகுளம் பாபு, தமிழக வெற்றி கழக மாவட்ட மாணவரணி அமைப்பாளர் மனோஜ்குமார், மின்சார வாரிய தொழிற்சங்க நிர்வாகி ராஜேஷ்குமார், இளைஞர் மன்ற நிர்வாகிகள் தமிழ்ராஜ், சதீஷ்குமார், விவேக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.