தூத்துக்குடி, ஆக.25:
தூத்துக்குடி முள்ளக்காடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்காக உப்பள நிலங்களை தமிழக அரசு கையகப்படுத்தும் நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும் என எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வலியுறுத்தியுள்ளார்.
கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்காக முள்ளக்காடு, முத்தையாபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள உப்பள நிலங்களை கையகப்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் முள்ளக்காடு பகுதியில் உள்ள உப்பளங்களை நேரில் பார்வையிட்டு, உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கைகள் மற்றும் அவர்களின் வாழ்வாதாரப் பிரச்னைகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
முள்ளக்காடு பகுதியில் உள்ள உப்பளங்கள் சாதாரண நிலப்பரப்புகள் அல்ல. 1937-ஆம் ஆண்டு நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க உப்பு சத்தியாகிரகப் போராட்டத்திற்குப் பின்னர், நமது முன்னோர்கள் கரடுமுரடாகவும் மேடு பள்ளங்களாகவும் இருந்த கடற்கரைப் புறம்போக்கு நிலங்களைத் தங்களது சொந்தச் செலவிலும் கடுமையான உடலுழைப்பாலும் சீரமைத்து உப்பளப் பாத்திகளாக மாற்றினர்.
கடந்த 90 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமுறை தலைமுறையாக உப்பு உற்பத்தியை மேற்கொண்டு வரும் உற்பத்தியாளர்களின் உழைப்பும், அவர்களைச் சார்ந்து வாழும் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் இந்த உப்பளங்களோடு பின்னிப் பிணைந்துள்ளன. இத்தகைய பாரம்பரிய உப்பள நிலங்களை கையகப்படுத்தி வெளிநாட்டு மற்றும் தனியார் நிறுவனங்களுக்குத் தாரை வார்ப்பது மிகப்பெரிய அநீதியாகும்.
முள்ளக்காடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உப்பளங்கள் அழிக்கப்பட்டால் ஆண்டுதோறும் சுமார் 5 லட்சம் டன் உப்பு உற்பத்தி பாதிக்கப்படும். இதனால் தமிழகத்திலும், இந்திய அளவிலும் உப்புத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. அத்தியாவசிய உணவுப் பொருளான உப்பின் தேவைக்காக தமிழகம் குஜராத் உள்ளிட்ட பிற மாநிலங்களைச் சார்ந்திருக்கும் நிலை ஏற்படக்கூடும்.
மேலும், உப்பு உற்பத்தியை மட்டுமே நம்பி வாழும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், சில்லறை வியாபாரிகள், மொத்த வியாபாரிகள் மற்றும் இதனைச் சார்ந்துள்ள பல்வேறு தொழில்களில் ஈடுபடுபவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்படும்.
முள்ளக்காடு உப்பளப் பகுதிகள் உப்பு உற்பத்திக்கு மட்டுமின்றி, மழைக்காலங்களில் மழைநீர் வடிகாலாகவும் முக்கியப் பங்காற்றுகின்றன. குறிப்பாக மதிகெட்டான் ஓடை உள்ளிட்ட இயற்கை நீர்வழிப் பகுதிகள் பாதிக்கப்பட்டால், மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
அதேபோல், இப்பகுதியின் பாரம்பரிய மீன்பிடித் தொழிலும் பாதிக்கப்படும். உப்பளங்கள், நீர்வழிகள் மற்றும் கடற்கரைச் சூழல் ஆகியவை ஒன்றோடொன்று தொடர்புடைய நிலையில் இருப்பதால், ஒரு பகுதியை அழிப்பது ஒட்டுமொத்த வாழ்வாதாரச் சூழலையும் பாதிக்கும்.
எனவே, கப்பல் கட்டுமான தளம் அமைப்பதற்காக உப்பள நிலங்களை கையகப்படுத்தும் முடிவை தமிழக அரசு உடனடியாக மறுபரிசீலனை செய்து கைவிட வேண்டும். உப்பு உற்பத்தியாளர்களின் நீண்டகால வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் அவர்களின் கோரிக்கைகளுக்கு அரசு உரிய தீர்வு காண வேண்டும்.
உப்பளங்கள் மூலம் ஆண்டுதோறும் அரசுக்கு ரூ.50 லட்சம் முதல் ரூ.70 லட்சம் வரை வருவாய் ஈட்டக்கூடிய வாய்ப்பு உள்ளது. எனவே, உப்பு உற்பத்தியாளர்கள் ஏக்கருக்கு ஆண்டுக்கு ரூ.5,000 வீதம் அரசுக்கு நியாயமான குத்தகைத் தொகையைச் செலுத்தத் தயாராக உள்ளனர்.
இதனை அரசு ஏற்றுக்கொண்டு, உப்பு உற்பத்தியாளர்களுக்கு நில உரிமையையோ அல்லது நீண்டகால குத்தகை உரிமையையோ வழங்கி, பாரம்பரிய உப்பு உற்பத்தித் தொழிலைப் பாதுகாக்க வேண்டும். அதேநேரத்தில், உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் கப்பல் கட்டுமானத் திட்டத்திற்கான மாற்று இடங்களை அரசு பரிசீலிக்க வேண்டும்.
இவ்வாறு எஸ்டிபிஐ மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்தார்.
நிர்வாகிகள் பங்கேற்பு
நிகழ்ச்சியில் உப்பு உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள் சேகர், பொன்ராஜ், சின்னராஜ், பால்ராஜ், முகேஷ் சண்முகவேல், சிவாகர் மற்றும் எஸ்டிபிஐ கட்சியின் தூத்துக்குடி மாவட்டத் தலைவர் ஷேக் அஷ்ரப் அலி பைஜி, மாவட்டச் செயலாளர் முகம்மது உமர், நிர்வாகிகள் நிசார், அப்துல் அஜீஸ், தொகுதித் தலைவர்கள் காதர் உசேன், செயலாளர் ரியாஸ் அஹமது, அப்துல்லாஹ், பவுஸர் அமீர், எஸ்டிடியூ மாவட்டத் தலைவர் குலசை தாஹிர், மாவட்டத் துணைத் தலைவர் ஷேக் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.