தமிழக வெற்றிக் கழக அரசின் 100 நாள் நல்லாட்சி சாதனைகளை விளக்கும் பொதுக்கூட்டம் தூத்துக்குடி மத்திய மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வி.வி.டி. சிக்னல் அருகே நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
கூட்டத்தில் மத்திய மாவட்ட செயலாளரும், தமிழக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சருமான ஸ்ரீநாத் முன்னிலை வகித்து சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
சினிமாவில் சாதனை நாயகராக இருந்து வந்த முதலமைச்சர் விஜய், தமிழகம் பல்வேறு வகைகளில் சீரழிந்து செல்வதையும், இளம் தலைமுறையினர் பாதிக்கப்படுவதையும் பார்த்து அமைதியாக இருக்க முடியாமல், அவர்களைப் பாதுகாக்கவும், மக்கள் நலனை காக்கவும் அரசியலுக்கு வந்துள்ளார். இரண்டரை மாதங்களில் மக்களை சந்தித்து தேர்தலை எதிர்கொண்டு ஆட்சியைப் பிடித்த முதலமைச்சர் விஜயின் சாதனை இந்திய அளவில் தனித்துவமானது.
சமூகத்திற்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கும் இருந்தது. அதற்கேற்ப என்னை தூத்துக்குடி வேட்பாளராக அறிவித்ததும் எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அப்போது என்னை அழைத்த முதலமைச்சர் விஜய், “வேட்பாளராக நிற்கிறாய்... ஜெயிக்கிறாய் நண்பா, ஜெயித்து விடு... கப்பு முக்கியம் நண்பா” என்று ஊக்கமளித்தார்.
தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் மக்களின் இதயங்களில் முதலமைச்சர் விஜய் நிறைந்துள்ளார். செல்போனில் கேம் விளையாடி, ரீல்ஸ் பார்த்துக் கொண்டிருந்த இளம் தலைமுறையினரை சட்டமன்ற நிகழ்வுகளை நேரலையில் பார்க்கச் செய்து, அரசியல் மற்றும் நாட்டின் நடப்புகளை அறிந்துகொள்ளும் வகையில் சமூக சிந்தனையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்.
100 நாட்களில் அவர் மேற்கொண்டுள்ள பல்வேறு நடவடிக்கைகள், தமிழகத்தின் நிரந்தர முதலமைச்சராக தொடர்வதற்கான வலிமையை அவருக்கு வழங்கியுள்ளது. அவர் வழிவிட்டால் மட்டுமே வேறு எவராலும் அரசியல் களத்தில் முன்னேற முடியும் என்றார்.
நிகழ்ச்சியில் மாநில செய்தித் தொடர்பாளர் முகமது இப்ராகிம் ராவுத்தர் உள்ளிட்டோர் பேசினர். வரும் உள்ளாட்சித் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் முழுமையான வெற்றியை பெறுவது முக்கியம் என அவர்கள் குறிப்பிட்டனர்.
நிகழ்ச்சிக்கு தமிழக வெற்றிக் கழக நிர்வாகி கிஷோர் தலைமை வகித்தார். ஜே.கே.ஆர். முருகன், மாவட்ட இணை செயலாளர் கோல்டன், மாநில துணைப் பொதுச் செயலாளர் சாமுவேல் ராஜ், எஸ்.டி.ஆர். விஜய சீலன், வக்கீல் வாரியார், மாவட்ட பொருளாளர் சிவக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள், மகளிர் அணியினர், மாவட்ட, பகுதி, வட்டக் கழக நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.