தூத்துக்குடி எக்ஸலண்ட் டேக்வாண்டோ அசோசியேஷன் சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டியில் 125-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
தூத்துக்குடி சென்னை சில்க்ஸ் – ஸ்ரீகுமரன் தங்க மாளிகை வளாகத்தில் நடைபெற்ற இப்போட்டிக்கு தமிழ்நாடு டேக்வாண்டோ அசோசியேஷன் ஊக்குவிப்பாகவும், இந்திய டேக்வாண்டோ கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு மாநில ஒலிம்பிக் சங்கம் இணைப்பாகவும் செயல்பட்டன. ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கியோருகி, பூம்சே ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.
போட்டியை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் என்.பி. ஜெகன் பெரியசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் என்.ஏ. ஜெயரத்தின ராஜன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் டாக்டர் எஸ். கண்ணதாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
போட்டியை திருநெல்வேலி மாவட்ட டேக்வாண்டோ சங்க செயலாளரும், தமிழ்நாடு டேக்வாண்டோ சங்க செயற்குழு உறுப்பினருமான என். ரவீந்திரன் ஒருங்கிணைத்தார். தூத்துக்குடி எக்ஸலண்ட் டேக்வாண்டோ சங்கத் தலைவர் பி. கோபாலகிருஷ்ணன், அமைப்புச் செயலாளர் எஃப். ஜோசப் ஆண்டனி பியோ ஜெஃப்ரிஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் போட்டிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
தமிழ்நாடு டேக்வாண்டோ சங்க பொதுச் செயலாளரும், 8-வது டான் கிராண்ட் மாஸ்டருமான பி. செல்வமணி, தமிழ்நாடு மாநில ஒலிம்பிக் சங்கத் தலைவரும், டேக்வாண்டோ ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா தலைவருமான டாக்டர் இஷாரி கே. கணேஷ் ஆகியோர் போட்டிக்கு ஆதரவு வழங்கினர்.
தொடக்க நிகழ்ச்சியில் தொழிலதிபர் ராமச்சந்திரன், பைனான்ஸ் இஸ்மாயில் பாய், ஜெய் ஸ்போர்ட்ஸ் உரிமையாளர் சுவாதிகா உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.
போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் பல்வேறு பிரிவுகளில் தங்களது திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தினர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
மாவட்ட அளவில் நடைபெற்ற இப்போட்டி, மாணவ, மாணவிகளின் டேக்வாண்டோ திறமைகளை வெளிக்கொண்டு வருவதுடன், அடுத்த கட்ட போட்டிகளுக்கான சிறந்த வீரர்களை உருவாக்கும் வகையிலும் பயனுள்ளதாக அமைந்தது.