தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்ட பின்னர், முதல்முறையாக தூத்துக்குடிக்கு வந்த அமைச்சர் ஸ்ரீநாத்துக்கு விமான நிலையத்தில் அக்கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தமிழக முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான ஜோசப் விஜய், தூத்துக்குடி சட்டப்பேரவை உறுப்பினரும், தமிழக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சருமான ஸ்ரீநாத்தை தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளராக நியமித்து அறிவித்திருந்தார்.
இதையடுத்து, மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்ட பின்னர் முதல்முறையாக அமைச்சர் ஸ்ரீநாத் விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். அவரை வரவேற்க மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் நூற்றுக்கணக்கான கார்களில் விமான நிலையத்திற்கு அணிவகுத்து வந்தனர்.
அமைச்சர் ஸ்ரீநாத்துக்கு கிரீடம் அணிவித்தும், சால்வைகள் மற்றும் மாலைகள் அணிவித்தும் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
நிகழ்ச்சியில் மாநில துணைப் பொதுச் செயலாளர் சாமுவேல்ராஜ், மாவட்ட இணைச் செயலாளர் கோல்டன், பொருளாளர் சிவக்குமார், துணைச் செயலாளர்கள் சுரேஷ்குமார், கவிதா, செயற்குழு உறுப்பினர்கள் முருகேஷ், கார்த்திக் ராஜரத்தினம், பெர்க்மான்ஸ் அந்தோணி, மாரியம்மாள், ஷாமினி, இசக்கியம்மாள் என்ற அருணா, சதீஷ்குமார், ஜோசப்துரை ஆனந்த், சித்ரா, ஜனோஜ்குமார், கிஷோர், எஸ்.டி.ஆர். விஜயசீலன், வக்கீல் வாரியார், திருச்சிற்றம்பலம், ரவிக்குமார், பொன்ராஜ், தெர்மல்நகர் ஜார்ஜ்புஷ், மாநகராட்சி கவுன்சிலர் மந்திரமூர்த்தி, கௌதம் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பகுதி செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
வரவேற்பை ஏற்றுக்கொண்ட அமைச்சர் ஸ்ரீநாத், கூட்டத்திற்குள் வர முடியாமல் நின்றிருந்த பெண் நிர்வாகிகளிடம் நேரில் சென்று அவர்களின் வாழ்த்துகளைப் பெற்றுக்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஸ்ரீநாத் கூறியதாவது:
“என்னை மாவட்ட செயலாளராக அறிவித்த தமிழக முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய்க்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். முதன்முதலில் எனக்கு இந்த பொறுப்பை வழங்கிய பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கும், கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி.
என்னை நம்பி வாக்களித்த தூத்துக்குடி மக்கள் என்னை கௌரவப்படுத்தி இந்த இடத்தில் வைத்திருப்பதற்கு ரொம்ப ரொம்ப நன்றி. இது முக்கியமான பொறுப்பு. இதனை சீரும் சிறப்புமாக செய்வேன். இந்த கௌரவத்தை அளித்த முதலமைச்சரின் ஆசியுடன் தூத்துக்குடியில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு, அவருக்கு மேலும் பெருமை சேர்ப்பேன்.
தூத்துக்குடியில் கடந்த ஒரு வாரமாக நிலவி வந்த குடிநீர் பிரச்சனை குறித்து மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் பேசியுள்ளேன். தற்போது குடிநீர் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு நாட்களில் அனைத்து பகுதிகளுக்கும் முறையாக குடிநீர் வழங்கப்படும்.
ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படுவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக தமிழக முதலமைச்சரிடம் பேசி, அடுத்த வாரம் டெல்லி சென்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் மத்திய மீன்வளத்துறை அமைச்சரை சந்தித்து பேச உள்ளோம். கண்டிப்பாக நல்ல முடிவு எடுப்போம்” என்றார்.
தொடர்ந்து தூத்துக்குடி மாநகரில் உள்ள பல்வேறு தலைவர்களின் சிலைகளுக்கு அமைச்சர் ஸ்ரீநாத் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது தமிழக வெற்றிக் கழக இளைஞரணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்