தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் கடந்த நான்கு நாட்களாக நிலவி வந்த குடிநீர் தட்டுப்பாட்டை போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து சரிசெய்து, பொதுமக்களுக்கு சீரான குடிநீர் விநியோகத்தை மீண்டும் வழங்க நடவடிக்கை எடுத்த மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமிக்கு பொதுமக்கள் மத்தியில் பாராட்டு குவிந்து வருகிறது.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளுக்கு வல்லநாடு பகுதியில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி வல்லநாடு பகுதியில் மாநகராட்சிக்கு குடிநீர் கொண்டு வரும் பிரதான குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக, ஆகஸ்ட் 5 முதல் 8-ஆம் தேதி வரை தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது.
இதனால் பொதுமக்கள் குடிநீருக்காக பெரும் சிரமத்தை சந்தித்தனர். இந்நிலையில், குழாய் பழுது ஏற்பட்ட தகவல் கிடைத்தவுடன் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதுடன், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும், பழுது விரைவில் சரிசெய்யப்பட்டு தடையின்றி குடிநீர் வழங்கப்படும் என்றும் மேயர் ஜெகன் பெரியசாமி அறிவித்திருந்தார்.
இதையடுத்து, பழுதை சரிசெய்யும் பணிகளை விரைவுபடுத்த மாநகராட்சி அதிகாரிகளுக்கு மேயர் ஜெகன் பெரியசாமி உத்தரவிட்டார். பணிகள் நடைபெறும் இடங்களுக்கு பகல், இரவு என நேரில் சென்று ஆய்வு செய்த அவர், அதிகாரிகள் மற்றும் பணியாளர்களிடம் பணிகளின் நிலவரத்தை கேட்டறிந்து, விரைந்து பணிகளை முடிக்க அறிவுறுத்தினார்.
மேயரின் நேரடி கண்காணிப்பில் தொடர்ந்து நடைபெற்ற பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 8-ஆம் தேதி இரவு முதல் மாநகராட்சி பகுதிகளுக்கு மீண்டும் குடிநீர் விநியோகம் தொடங்கியது. நான்கு நாட்களாக குடிநீரின்றி தவித்த மக்களுக்கு சீரான குடிநீர் கிடைத்தது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
குடிநீர் பிரச்னையில் அமைச்சர் எங்கே? — பொதுமக்கள் கேள்வி
இதற்கிடையே, தூத்துக்குடி சட்டப்பேரவை உறுப்பினரும், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சருமான ஸ்ரீநாத்தின் செயல்பாடு குறித்து பொதுமக்கள் மத்தியில் விமர்சனம் எழுந்துள்ளது.
நான்கு நாட்களாக தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், பிரச்னையை தீர்க்கும் நடவடிக்கைகளில் அமைச்சர் நேரடியாக களத்தில் இறங்காதது ஏன்? என பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஒருபுறம் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி இரவு பகலாக களத்தில் நின்று அதிகாரிகளை ஒருங்கிணைத்து பணிகளை விரைவுபடுத்தி குடிநீர் விநியோகத்தை சீரமைத்த நிலையில், மறுபுறம் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினரும் அமைச்சருமான ஸ்ரீநாத் இந்த விவகாரத்தில் போதிய கவனம் செலுத்தவில்லை என்ற அதிருப்தி பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
“மக்களின் பிரச்னையில் களத்தில் நிற்பவர்களுக்கே ஆதரவு” — பொதுமக்கள்
இதுகுறித்து பொதுமக்கள் சிலர் கூறுகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், ஆட்சிக்கு வந்தால் மக்களின் குறைகளைத் தீர்க்க அமைச்சர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் முழு வீச்சில் செயல்படுவார்கள் என்று கூறியதை நம்பி வாக்களித்ததாகவும், தற்போது அந்த வாக்குறுதிக்கு ஏற்ப தொகுதி பிரதிநிதிகள் செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
“தொகுதியில் அடிப்படை பிரச்னை ஏற்படும் நேரத்தில் மக்கள் மத்தியில் இருப்பதும், பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுப்பதும் ஒரு சட்டப்பேரவை உறுப்பினரின் முக்கிய கடமை. குடிநீர் போன்ற அத்தியாவசிய பிரச்னையில் மக்கள் நான்கு நாட்கள் சிரமப்பட்டபோது, அதற்கான தீர்வில் அமைச்சர் நேரடியாக கவனம் செலுத்தியிருக்க வேண்டும்” என பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.
மேலும், மாநகராட்சி நிர்வாகத்தின் துரித நடவடிக்கையால் தற்போது குடிநீர் விநியோகம் சீரடைந்துள்ள நிலையில், இதுபோன்ற அடிப்படை பிரச்னைகளில் அரசியல் வேறுபாடுகளை கடந்து அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
தூத்துக்குடி மக்களின் குடிநீர் பிரச்னையை உடனடியாக கவனத்தில் கொண்டு, பழுதை சரிசெய்து குடிநீர் விநியோகத்தை மீட்டெடுக்க களத்தில் நின்ற மேயர் ஜெகன் பெரியசாமியின் நடவடிக்கை பொதுமக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ள நிலையில், தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும் அமைச்சருமான ஸ்ரீநாத்தின் செயல்பாடு குறித்து எழுந்துள்ள அதிருப்திக்கு அவர் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.