தூத்துக்குடி கடற்கரையோர முள்ளக்காடு, கோவளம், பசுவந்தரை, தன்பாடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிறிய அளவிலான உப்பளங்களை கப்பல் கட்டும் தளத்திற்காக நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிராக போராடி வரும் உப்பு உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் வியாபாரிகள், தங்களது கோரிக்கைக்கு அரசியல் கட்சித் தலைவர்களின் ஆதரவை திரட்டும் முயற்சியை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த நிலையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் எம்.எல்.ஏ. போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் என உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் சிறிய அளவிலான உப்பளங்களை கப்பல் கட்டும் திட்டத்திற்காக கையகப்படுத்தும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, உப்பு உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள், மீனவர்கள் மற்றும் வியாபாரிகள் பல்வேறு கட்டப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக சார் ஆட்சியர் பிரபு தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. பின்னர், முள்ளக்காடு பேருந்து நிறுத்தம் அருகே காத்திருப்பு போராட்டமும் நடைபெற்றது. இதில் உப்பு உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள், மீனவர்கள் மற்றும் வியாபாரிகள் திரளாக கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.
இதையடுத்து, அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக முத்தையாபுரம் காவல் நிலையத்தில் 25 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சூழலில், தங்களது கோரிக்கையை மாநில அளவில் வலியுறுத்த அரசியல் கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டவும், தொடர் போராட்டங்களை முன்னெடுக்கவும் உப்பு உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ளனர். அதன் ஒரு பகுதியாக ஏற்கனவே நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களை சந்தித்து கோரிக்கைகளை விளக்கியுள்ளனர்.
சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், உப்பு உற்பத்தியாளர்கள் சென்னை சென்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் எம்.எல்.ஏ.வை அவரது கட்சித் தலைமையகத்தில் நேரில் சந்தித்தனர்.
இந்த சந்திப்பில் உப்பு உற்பத்தியாளர் சங்க செயலாளர் சேகர், முகேஷ் சண்முகவேல், பாலசுப்பிரமணியன், தூத்துக்குடி மாநகர் மாவட்ட தேமுதிக தலைவர் தயாளலிங்கம், முல்லைக்கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, உப்பளங்களை பாதுகாக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கையகப்படுத்தும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
முன்னதாக, பிரேமலதா விஜயகாந்த் தூத்துக்குடி உப்பளங்களை நேரில் பார்வையிட்டு அதன் முக்கியத்துவத்தை அறிந்திருப்பதால், உற்பத்தியாளர்களின் கோரிக்கை மனுவைப் பெற்றுக்கொண்டு, அவர்களது போராட்டத்துக்கு முழு ஆதரவு அளித்து துணை நிற்பதாக உறுதியளித்ததாக உப்பு உற்பத்தியாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் தொடர்ந்து சந்தித்து ஆதரவு திரட்டும் நடவடிக்கை தொடரும் என்றும், உப்பளங்களை பாதுகாக்கும் வரை போராட்டம் தீவிரமாக முன்னெடுக்கப்படும் என்றும் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.