தூத்துக்குடி மாவட்டம் வெம்பூர் சிப்காட் தொழிற்பூங்காவுக்கான நில எடுப்பு நடவடிக்கைகளில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும், இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக செயற்பாட்டாளர் கப்பிகுளம் சு. பாபு, மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
எட்டயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தின் மேல்தளத்தில் வெம்பூர் சிப்காட் தொழிற்பூங்கா நில எடுப்பு அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு நிர்வாக அதிகாரியாகவும், மாவட்ட வருவாய் அலுவலரின் நேர்முக உதவியாளராகவும் நாகராஜன் என்பவர் கடந்த இரண்டரை ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.
நில எடுப்பு தொடர்பான பட்டா, பத்திரப்பதிவு மற்றும் பிற முக்கிய ஆவணங்களை முறையாக ஆய்வு செய்யாமல், சில தனியார் நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்பட்டு, நில உரிமை இல்லாத நபர்களுக்கும் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், போலியான ஆவணங்கள் மூலம் நில உரிமையாளர்களை உருவாக்கி, நில எடுப்பு இழப்பீட்டுத் தொகை பெறப்பட்டதாகவும், இதன் மூலம் பல லட்சம் ரூபாய் முறைகேடு செய்யப்பட்டுள்ளதாகவும் மனுவில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 31-ஆம் தேதி தனியார் நிறுவன ஊழியர்கள் எட்டயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தின் கிழக்குப் பகுதியில் வாகனத்தை நிறுத்தி வைத்து, நாகராஜன் மற்றும் சில வட்டாட்சியர்களை வரவழைத்து பணப்பட்டுவாடா செய்ததாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்த உண்மை நிலையை அறிய வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் தூத்துக்குடி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவில் புகார் அளித்துள்ளதாகவும், அந்தப் புகார்கள் நிலுவையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெம்பூர் வருவாய் கிராமத்தில் புல எண் 377/2B1, 377/2B2 ஆகிய நிலங்கள் தொடர்பான ஆவணங்கள் மற்றும் வில்லங்கச் சான்றிதழில் காணப்படும் பெயர்களை முறையாக ஆய்வு செய்யாமல் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்த நிலங்கள் தொடர்பாக ரூ.8 லட்சம் வழங்கப்பட்ட விவகாரத்தில் சந்தேகங்கள் எழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, நாகராஜன் பணியாற்றிய கடந்த இரண்டரை ஆண்டுகளில் வெம்பூர் சிப்காட் நில எடுப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட அனைத்து கோப்புகளையும் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்ட விதம், அவற்றின் அடிப்படையில் வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகைகள் மற்றும் அதில் தொடர்புடைய அதிகாரிகள் குறித்து மாவட்ட நிர்வாகமும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவும் விரிவான விசாரணை நடத்த வேண்டும்.
மேலும், புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள நாகராஜன் மற்றும் நில எடுப்பு தொடர்பான தனி மாவட்ட வருவாய் அலுவலர் சங்கரலிங்கம் உள்ளிட்டோர் மீது விசாரணையின் அடிப்படையில் உரிய குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கப்பிகுளம் சு. பாபு கோரிக்கை விடுத்துள்ளார்.