தூத்துக்குடி முள்ளக்காடு–கோவளம் பகுதிகளில் உப்பள நிலங்களை கையகப்படுத்தி கப்பல் கட்டும் தளம் அமைக்கும் திட்டத்துக்கு எதிராக போராடி வரும் உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் உப்பள தொழிலாளர்களின் போராட்டத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆதரவு அளிக்கும் என அக்கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.
திருச்செந்தூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்ற திருமாவளவன், முள்ளக்காடு பகுதியில் உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் உப்பள தொழிலாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, கப்பல் கட்டும் தளம் அமைக்கப்பட்டால் உப்பளத் தொழிலுக்கும், தொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்கும் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார்.
அவருக்கு கட்சி நிர்வாகிகள் ஆட்டோ கணேசன், சந்தனகுமார், செந்தூர் அர்ஜுன், முரசு தமிழப்பன், மாரிமுத்து, முருகேஸ்வரி உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். உப்பு உற்பத்தியாளர்கள் சேகர், ரகுபதி, முகேஷ், சண்முகவேல், சிவாகர், பால்ராஜ், பாலசுப்ரமணியன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

50 ஆயிரம் தொழிலாளர்கள் பாதிப்பு
பின்னர் செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறியதாவது:
தூத்துக்குடி முள்ளக்காடு பகுதியில் உப்பு தொழில் நடைபெறும் நிலங்களை கையகப்படுத்தி கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்காக தென்கொரியாவைச் சேர்ந்த ஹூண்டாய் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. கடந்த ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து, தலைமுறை தலைமுறையாக உப்பு உற்பத்தித் தொழிலை செய்து வரும் உப்பள தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏறத்தாழ 50 ஆயிரம் பேர் இந்த தொழிலை நம்பி வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. எனவே, கப்பல் கட்டும் தளம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆதரிக்கிறது.
மக்களின் ஒப்புதல் இல்லாமல் இத்திட்டத்தை செயல்படுத்தும் முயற்சியை அரசு மேற்கொள்ளக்கூடாது. மக்களின் போராட்டத்தையும், அவர்களின் உணர்வுகளையும் மதித்து உப்பளத் தொழிலையும், தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் தமிழக அரசு பாதுகாக்க வேண்டும்.
இந்த பிரச்னையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்வோம். முதலமைச்சரை நேரில் சந்தித்து இதுகுறித்து வலியுறுத்துவேன் என்றார்.
இடதுசாரி கட்சிகளுக்கு ஆதரவு இல்லை
தொடர்ந்து, தமிழக அரசுக்கு இடதுசாரி கட்சிகள் அளித்து வந்த ஆதரவு குறித்து பேசிய திருமாவளவன், இடதுசாரி கட்சிகள் தொடக்கத்தில் இருந்தே தவெக ஆட்சி அமைப்பதற்கு மட்டுமே ஆதரவு அளிப்பதாக கூறி வந்ததாகவும், ஆட்சி தொடர்வதற்கான ஆதரவு எப்போதும் இருக்கும் என்றும் தெரிவித்தார்.
அதேநேரத்தில், தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளில் தனித்து போட்டியிடுவதாக இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்திருப்பது அவர்களின் உரிமை மற்றும் சுதந்திரம் என்றும் கூறினார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தற்போது மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. அந்த இரண்டு தொகுதிகளிலும் கூட்டணி வெற்றி பெறுவதற்கு விசிக ஒத்துழைப்பு வழங்கும் என்றும் திருமாவளவன் தெரிவித்தார்.
ஆ.ராசா பேச்சு அதிர்ச்சி அளிக்கிறது
திமுக ஆர்ப்பாட்டத்தில் மக்களவை உறுப்பினர் ஆ.ராசா பேசியது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் திருமாவளவன் கூறினார்.
திமுகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ஆ.ராசா, ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சரை ஒருமையில் பேசுவது, அவரது பிறப்பு குறித்து கேள்வி எழுப்புவது போன்ற வகையில் பேசியிருப்பது திமுகவுக்கு எதிராகவே முடியும்.
அண்மையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வீடியோவில், யாருடைய மனதையும் காயப்படுத்தும் வகையில் திமுகவினர் பேசமாட்டார்கள் என்றும், அந்த மாண்பு பாதுகாக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.
ஆனால், ஆ.ராசா உள்ளிட்ட முன்னணி தலைவர்களின் ஆர்ப்பாட்டப் பேச்சுகள் அதற்கு மாறாக அமைந்துள்ளன. பெரியார் பாசறையில் வளர்ந்தவர்களின் பேச்சாக இது தெரியவில்லை. இதுபோன்ற பேச்சுகள் திமுகவின் மீதான நன்மதிப்பை சீர்குலைக்கும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன் என்றார்.