சட்டம்–ஒழுங்கு பிரச்சினைகள், பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்காக அப்பகுதி மக்களை அப்புறப்படுத்தும் முயற்சி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து மக்கள் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ள நிலையில், மக்களின் கவனத்தை திசைதிருப்பும் நோக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் இல்லத்தில் சோதனை நடத்தப்பட்டுள்ளதாக திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து கனிமொழி கருணாநிதி வெளியிட்டுள்ள கருத்தில், “சட்டம்–ஒழுங்கு பிரச்சினைகள், புதிய தலைமைச் செயலகத்திற்காக பட்டினப்பாக்கம் மக்களை அப்புறப்படுத்தும் முயற்சி என, தவெக அரசின் நடவடிக்கைகளை மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர்.
மேலும், முதலீடுகளை ஈர்ப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டுப் பயணத்தின் உண்மை நிலையும் வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில், வழக்கம்போல மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்காக நேற்று முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் இல்லத்தில் சோதனை நடத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
அதிகாரத்தைப் பயன்படுத்தி அச்சுறுத்துவதாலும், அடக்குமுறை நடவடிக்கைகளை மேற்கொள்வதாலும் திமுகவின் குரலை ஒருபோதும் ஒடுக்கிவிட முடியாது என்றும் கனிமொழி தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு திமுக ஒருபோதும் அடிபணியாது என்றும், மக்களின் பிரச்சினைகளை தொடர்ந்து முன்னெடுத்து குரல் கொடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் சென்னை மற்றும் திருச்சி இல்லங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செப்டம்பர் 16-ஆம் தேதி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சோதனை நடத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தனியார் பள்ளிகளுக்கான அனுமதி தொடர்பான ரூ.100 கோடி மோசடி புகார் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக இந்தச் சோதனை நடைபெற்றதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.