பள்ளி மாணவர்களின் பிஞ்சு மனங்களில் அரசியல் கட்சி அடையாளங்களைத் திணிக்கும் வகையில், அவர்களுக்கு த.வெ.க. கட்சித் துண்டை அணிவித்திருப்பது வெட்கக்கேடானதும், மிகவும் கண்டிக்கத்தக்கதுமாகும் என முன்னாள் அமைச்சர் மற்றும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பள்ளி மாணவர்களுக்கு த.வெ.க. கட்சித் துண்டை அணிவித்து, அவர்களை அரசியல் அடையாளங்களுடன் நிறுத்தியிருப்பது அப்பட்டமான அரசியல் அத்துமீறலாகும். இந்தச் சம்பவத்தில் பங்கேற்ற மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத்தின் பொறுப்பற்ற செயல்பாட்டை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
அமைச்சர் என்ற உயர்ந்த பொறுப்பில் இருப்பவர், மாணவர்களின் கல்வி, ஒழுக்கம் மற்றும் எதிர்காலத்துக்கு முன்னுதாரணமாகத் திகழ வேண்டும். மாறாக, பள்ளி மாணவர்களை அரசியல் அடையாளங்களுடன் நிறுத்துவதும், அவர்களின் தோளில் கட்சித் துண்டை அணிவிப்பதும் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
பள்ளி மாணவர்களை அரசியல் களத்தில் பயன்படுத்துவதும், அவர்களை கட்சி சார்ந்த நிகழ்வுகளின் அடையாளங்களாகக் காட்டுவதும் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும். மாணவர்களின் பிஞ்சு மனங்களில் அரசியல் கட்சி அடையாளங்களைத் திணிக்கும் இதுபோன்ற செயல்களை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்.
பள்ளிக்கல்வித் துறையின் விதிமுறைகள் மற்றும் உத்தரவுகளை மதிக்காமல் செயல்படுவது கண்டிக்கத்தக்கது. மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்கால நலனே முதன்மையானதாக இருக்க வேண்டும்.
“மாணவர்களை தங்களது #ReelsModel அரசின் விளம்பரத்திற்கான கருவிகளாகப் பயன்படுத்துவதை அமைச்சர் உடனடியாக நிறுத்த வேண்டும். மாணவர்களின் எதிர்காலத்தை அரசியல் சுயநலத்துக்காக பயன்படுத்தும் இதுபோன்ற செயல்கள் இனியும் நடைபெறக்கூடாது” என கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.