ஓட்டப்பிடாரம் தாலுகாவில் 20-க்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வரும் நிலையில், கடந்த மூன்று மாதங்களாக கூட்டுறவுத்துறை மேற்பார்வையாளர் நிரந்தரமாக நியமிக்கப்படாததால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
ஓட்டப்பிடாரம் தாலுகாவிற்கு உட்பட்ட கூட்டுறவு சங்கங்கள் மூலம் பொதுமக்களுக்கு கால்நடை பராமரிப்பு கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன் உள்ளிட்ட பல்வேறு கடன் திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த கடன்களைப் பெறுவதற்காக பொதுமக்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினர் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து வருகின்றனர்.
ஆனால், கூட்டுறவு மேற்பார்வையாளர் நிரந்தரமாக இல்லாத காரணத்தால், பல்வேறு கூட்டுறவு சங்கங்களில் கடன் தொடர்பான கோப்புகள் பரிசீலனை மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைக்காக நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், கடன் கிடைக்கும் என நம்பி விண்ணப்பித்துள்ள பொதுமக்கள் நீண்ட நாட்களாக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக கால்நடை வளர்ப்பு மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்களின் பொருளாதார தேவைகளுக்காக பெறப்படும் கடன்கள் காலதாமதமாவதால், பயனாளிகள் தங்களது திட்டங்களை செயல்படுத்த முடியாமல் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து பொதுமக்கள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாளரிடம் புகார் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. நிலுவையில் உள்ள கடன் கோப்புகளை விரைந்து முடிப்பதற்கும், கூட்டுறவு சங்கங்களின் பணிகள் தடையின்றி நடைபெறுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால், புகார் அளித்த பொதுமக்களிடம், “இன்று சரி செய்கிறேன், நாளை சரி செய்கிறேன்” என தொடர்ந்து பதில் அளிக்கப்பட்டு வருவதாகவும், இதுவரை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
கூட்டுறவு சங்கங்களில் பணிகள் தொடர்ந்து நடைபெறுவதற்கு மேற்பார்வையாளர் முக்கியப் பங்கு வகிக்கும் நிலையில், நீண்ட காலமாக அந்தப் பணியிடம் நிரப்பப்படாமல் இருப்பது பொதுமக்களின் சேவையை பாதிக்கும் சூழலை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
எனவே, ஓட்டப்பிடாரம் தாலுகாவில் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு நிரந்தரமாக கூட்டுறவு மேற்பார்வையாளரை நியமிக்க வேண்டும். மேலும், பல்வேறு கூட்டுறவு சங்கங்களில் நிலுவையில் உள்ள கடன் கோப்புகளை விரைந்து பரிசீலித்து, தகுதியான பயனாளிகளுக்கு கடன் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.