ஸ்ரீவைகுண்டம் வடகால் பாசனப் பகுதிக்கு பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு அணைகளில் இருந்து முழுமையான அளவில் தாமிரபரணி தண்ணீர் திறந்து விடக் கோரி, ஸ்ரீவைகுண்டம் வடகால் கடைமடை பாய்மான விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் இன்று காலை தூத்துக்குடி அருகே டிராக்டர் மற்றும் மாட்டு வண்டிகளுடன் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி–நெல்லை 4 வழிச்சாலையில் புதுக்கோட்டை அருகே உள்ள தட்டப்பாறை விலக்கு பகுதியில் நடைபெற்ற இந்தப் போராட்டத்திற்கு குலையன்கரிசல் விவசாயிகள் சங்கத் தலைவர் ஹேம்நாத் ஜெகன், கூட்டாம்புளி தலைவர் பட்டு முருகேசன், சேர்வைக்காரன்மடம் தலைவர் தங்கதுரை, கோரம்பள்ளம் விவசாயிகள் சங்க முன்னாள் தலைவர் சுந்தரபாண்டி, அத்திமரப்பட்டி–முள்ளக்காடு–முத்தையாபுரம் விவசாயிகள் சங்கத் தலைவர் பூபதி நாடார், விவசாயிகள் சங்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஜோதிமணி உள்ளிட்டோர் தலைமை வகித்தனர்.
12 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் சாகுபடி
போராட்டத்தில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் டிராக்டர்கள் மற்றும் மாட்டு வண்டிகளுடன் பங்கேற்றனர். மேலும் தூத்துக்குடி யூனியன் முன்னாள் துணைச் சேர்மன் ஆஸ்கர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டு விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
அப்போது விவசாயிகள் கூறியதாவது:
ஸ்ரீவைகுண்டம் வடகால் பாசனப் பகுதியில் சுமார் 12 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களில் நெல், வாழை உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. ஆனால், பாசனத்துக்கு போதுமான அளவு தண்ணீர் திறந்து விடப்படாததால், பேய்குளம், பொட்டைக்குளம், கோரம்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குளங்கள் வறண்டு வருகின்றன.
இதன் காரணமாக சுமார் 6 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் கருகியுள்ளன. அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் கால்நடைகளுக்குக்கூட போதிய குடிநீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
உறுதி அளித்தும் தண்ணீர் திறக்கவில்லை என குற்றச்சாட்டு
கருகி வரும் பயிர்களை காப்பாற்ற உடனடியாக தண்ணீர் திறந்து விட வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அதிகாரிகள் ஏற்கனவே தண்ணீர் திறந்து விடப்படும் என உறுதி அளித்திருந்த போதிலும், அதன்படி கால்வாய்களில் தண்ணீர் திறந்து விடப்படவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டினர்.
இதையடுத்து, தூத்துக்குடி கீழ்தாமிரபரணி மற்றும் கோரம்பள்ளம் ஆறு வடிநிலக் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம், தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை விவசாயிகள் நடத்தினர்.
இருப்பினும் கடைமடை பகுதிகள் வரை போதுமான தண்ணீர் சென்றடையாததால், தொடர்ந்து பயிர்கள் வறட்சியால் கருகி வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.
தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
“விவசாயிகளின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகியுள்ளது. ஏற்கனவே பயிர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள பயிர்களையாவது காப்பாற்ற உடனடியாக பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு அணைகளில் இருந்து முழுமையான அளவில் தண்ணீர் திறந்து விட வேண்டும். கடைமடை வரை தடையின்றி பாசன நீர் சென்றடைவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்” என விவசாயிகள் வலியுறுத்தினர்.
போலீசார் குவிப்பு – விவசாயிகள் கைது
சாலை மறியல் போராட்டத்தைத் தொடர்ந்து தூத்துக்குடி ஏ.எஸ்.பி. சஞ்சித் நாயர் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
4 வழிச்சாலையில் போக்குவரத்து பாதிப்பு
விவசாயிகளின் சாலை மறியல் காரணமாக தூத்துக்குடி–நெல்லை பிரதான 4 வழிச்சாலையில் அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பேருந்துகள், லாரிகள், கார்கள் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் சாலையில் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.
இதனால் புதுக்கோட்டை–தட்டப்பாறை விலக்கு பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, மறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்திய பின்னர் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.