விவசாயிகளின் முக்கிய வாழ்வாதார கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற இந்தப் போராட்டத்தின்போது, போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் காவல்துறையினர் கடுமையாக நடந்து கொண்டதாகவும், சிலர் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜ. தலைவர் சித்ராங்கதன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வடகால் கடைமடை பாசனப் பகுதிகளில் விவசாயப் பணிகளுக்கு தேவையான தண்ணீர் கிடைக்க வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையாகும். தங்களது வாழ்வாதாரத்துடன் நேரடியாக தொடர்புடைய இந்த நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி விவசாயிகள் ஜனநாயக முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் காவல்துறையினர் கடுமையான அணுகுமுறையை மேற்கொண்டிருப்பதாக கூறப்படுவது கண்டிக்கத்தக்கது. விவசாயிகளின் கோரிக்கையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டிய நிலையில், அவர்களை அடக்குமுறையின் மூலம் கைது செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.
பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு அணைகளில் இருந்து விவசாயப் பயன்பாட்டிற்கு தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக விவசாயிகளின் கோரிக்கையை தமிழக அரசு உடனடியாக பரிசீலிக்க வேண்டும். பாசனத்திற்கான தண்ணீர் திறப்பதில் ஏதேனும் நடைமுறை அல்லது நிர்வாக சிக்கல்கள் இருந்தால், அதற்கான காரணங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விவசாயிகளிடம் நேரடியாக எடுத்துரைக்க வேண்டும்.
விவசாயிகளின் கோரிக்கையை புரிந்து கொண்டு, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பதே ஜனநாயக நடைமுறையாகும். அதற்கு மாறாக காவல்துறையை பயன்படுத்தி போராட்டத்தை ஒடுக்குவதும், விவசாயிகளை கைது செய்வதும் பிரச்னைக்கு தீர்வாகாது.
விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து அரசு அதிகாரிகள் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி, பாசனத்திற்கான தண்ணீர் பிரச்னைக்கு நிரந்தரமான மற்றும் நடைமுறைக்கு ஏற்ற தீர்வை ஏற்படுத்த வேண்டும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு பா.ஜ. தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தெரிவித்துள்ளார்.