தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜோசப் விஜய், முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறான கருத்துகளை தெரிவித்ததாகக் கூறி, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடியில் திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக சார்பில் சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கீதா ஜீவன், தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், தமிழக சட்டப்பேரவையின் மாண்பையும் ஜனநாயக நெறிகளையும் காக்க வேண்டும் என்றும், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து தரக்குறைவான கருத்துகளை தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
மேலும், “முதல்வர் ஜோசப் விஜய்யின் ஜனநாயக விரோதப் போக்கைக் கண்டிக்கிறோம்”, “சட்டப்பேரவை மாண்பைக் குலைக்காதே”, “மு.க.ஸ்டாலின் மீது அவதூறு பேசாதே”, “மக்கள் விரோத தமிழக வெற்றி கழக அரசைக் கண்டிக்கிறோம்” என்பன உள்ளிட்ட கண்டன முழக்கங்களை திமுகவினர் எழுப்பினர்.

முதல்வர் ஜோசப் விஜய், சட்டப்பேரவையில் அரசியல் கண்ணியத்துடனும் ஜனநாயக நெறிகளுடனும் செயல்பட வேண்டும் என வலியுறுத்திய ஆர்ப்பாட்டக்காரர்கள், எதிர்க்கட்சித் தலைவர்களையும் முன்னாள் முதலமைச்சர்களையும் அவமதிக்கும் வகையில் கருத்துகள் தெரிவிப்பதை கண்டித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் விளாத்திகுளம் எம்எல்ஏ மார்கண்டேயன், கோவில்பட்டி எம்எல்ஏ கருணாநிதி,மேயர் ஜெகன் பெரியசாமி மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், முன்னாள் எம்எல்ஏ சண்முகையா, அஜித்தா ஆக்னல், கவுன்சிலர் ரெங்கசாமி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர், வட்டம் மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், திமுக முன்னோடிகள் மற்றும் ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்