திருச்சி மாவட்டம், துறையூர் சட்டமன்றத் தொகுதியில் நிலவி வரும் குடிநீர் பிரச்னை குறித்து முறையிட வந்த பொதுமக்களில் ஒருவரை, சட்டமன்ற உறுப்பினரும் துணை சபாநாயகருமான ரவிசங்கர் தாக்கியதாக வெளியாகியுள்ள வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்துக்கு முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திருச்சி மாவட்டம், துறையூர் சட்டமன்றத் தொகுதியில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் குடிநீர் பிரச்னையால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், தங்கள் பகுதியில் தண்ணீர் வரவில்லை எனத் தனது குறைகளை எடுத்துக் கூறுவதற்காக, துறையூர் தொகுதியைச் சேர்ந்த கார்த்திக் குமார் என்பவர் எம்.எல்.ஏ.வும் துணை சபாநாயகருமான ரவிசங்கரைச் சந்தித்துள்ளார்.
மக்களின் குறைகளைக் கேட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய மக்கள் பிரதிநிதி, கோரிக்கை வைக்க வந்த பொதுமகனிடம் அடாவடித்தனமாகப் பேசி, கண்மூடித்தனமாகத் தாக்கியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
துணை சபாநாயகர் ரவிசங்கர், கார்த்திக் குமாரைத் தாக்கி விரட்டும் காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியாகியுள்ளது. அதில், 'தளபதிக்காக வாக்களித்தேன்' என்று கார்த்திக் குமார் கூறியபோதும் அவரைத் தொடர்ந்து தாக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கார்த்திக் குமார், தன்னைத் தாக்கியது ரவிசங்கர்தான் என்று கூறுவது போன்ற மற்றொரு வீடியோவும் வெளியாகியுள்ளது.
தமிழக வெற்றிக் கழக ஆட்சியில், மேடைப் பேச்சுக்காக திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்படுகின்றனர். எங்கள் மாவட்டச் செயலாளர்கள் மீது மேடைப் பேச்சுகளுக்காக காவல்துறை வழக்குப் பதிவு செய்து வருகிறது. விலைவாசி உயர்வு குறித்து கருத்துத் தெரிவிக்கும் பொருளாதார அறிஞர்கள்கூட கைது செய்யப்படுகின்றனர். அண்மையில்கூட தேர்தல் கால வழக்குத் தொடர்பாக நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஒருவர் அதிகாலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு அரசியல் விமர்சனங்களுக்கும் கருத்துகளுக்கும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அரசு, பொதுமக்களின் அடிப்படைத் தேவையான குடிநீர் பிரச்னையைத் தீர்க்கக் கோரி வந்த ஒருவரைத் தாக்கிய துணை சபாநாயகர் ரவிசங்கர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது? என முதல்வர் விஜய்க்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், துணை சபாநாயகர் ரவிசங்கர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தங்களது குறைகளையும் கோரிக்கைகளையும் தெரிவிக்க வரும் பொதுமக்களிடம் மக்கள் பிரதிநிதிகள் பொறுப்புடனும், கனிவுடனும், மரியாதையுடனும் நடந்துகொள்ள வேண்டும் என்றும் கீதாஜீவன் வலியுறுத்தியுள்ளார்.