பள்ளிக் கல்வித்துறை தொடர்பான முறைகேடு குற்றச்சாட்டின் அடிப்படையில் முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டுள்ள நடவடிக்கையை வரவேற்பதாக வீ த லீடர் இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும், நோபல் பிரிக்ஸ் நிறுவனத்தின் ரூ.1,000 கோடி முதலீடு தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு தமிழக அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பள்ளிக் கல்வித்துறை தொடர்பான முறைகேடு குற்றச்சாட்டின் அடிப்படையில் முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டுள்ள நடவடிக்கையை வரவேற்கிறோம். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
கடந்த 2023-ம் ஆண்டு நாங்கள் DMK Files வெளியிட்டபோது, தமிழ்நாட்டில் நோபல் ஸ்டீல் நிறுவனத்தின் ரூ.1,000 கோடி முதலீடு தொடர்பாகப் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தோம். ஆனால், அப்போது ஆட்சியில் இருந்த திமுக அரசு, அந்தக் கேள்விகளுக்கு உரிய விளக்கங்களை அளிக்கவில்லை.
நாங்கள் எதிர்பார்த்த அந்த முதலீடும் தமிழகத்துக்கு வரவில்லை. அந்த முதலீடு தொடர்பாக முறைகேடு நடைபெற்றிருக்கலாம் என்று நாங்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கும் இதுவரை உரிய பதில் அளிக்கப்படவில்லை.
மேலும், அன்பில் மகேஷ் தொடர்பாகக் குறிப்பிடப்பட்ட உதயநிதி ஸ்டாலின் பெயரிலான அறக்கட்டளை, நோபல் பிரிக்ஸ் நிறுவனம் செயல்பட்டு வந்த அதே முகவரியில் இயங்கி வந்ததாகக் கூறப்படும் தகவல் குறித்தும் இதுவரை தெளிவான விளக்கம் அளிக்கப்படவில்லை.
நோபல் பிரிக்ஸ் நிறுவனத்துக்கும் உதயநிதி ஸ்டாலின் பெயரிலான அறக்கட்டளைக்கும் இடையே என்ன தொடர்பு உள்ளது? நோபல் ஸ்டீல் நிறுவனத்தின் ரூ.1,000 கோடி முதலீடு தொடர்பாக நாங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு என்ன பதில்? இந்த விவகாரத்தில் எழுந்துள்ள சந்தேகங்களுக்கு யார் விளக்கம் அளிப்பது?
இத்தகைய கேள்விகளுக்கு உரிய பதில்கள் கிடைக்க வேண்டியது அவசியம். எனவே, இந்த விவகாரத்திலும் தமிழகத்தை ஆளும் தவெக அரசு வெளிப்படையான விசாரணை நடத்தி, உண்மை நிலவரத்தை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.
குற்றச்சாட்டுகள் தொடர்பான உண்மைகள் வெளிக்கொணரப்படுவதுடன், தவறு நடந்திருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இவ்வாறு வீ த லீடர் இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.