திமுக ஆட்சியில் திட்டமிடப்பட்டு, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களுக்கு தற்போது தவெக அரசு திறப்பு விழா நடத்தி, அவற்றைத் தங்களது சாதனைகளாகக் காட்டிக்கொள்வதாக முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
2021 முதல் 2026 வரை மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் ஆட்சிக்காலத்தில் தூத்துக்குடி தொகுதியில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் திட்டமிடப்பட்டு, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் முன்னெடுக்கப்பட்டன. தற்போது அந்தப் பணிகளுக்குத் திறப்பு விழா நடத்திவிட்டு, அவற்றைத் தங்களது சாதனைகளாக தவெக அரசு விளம்பரப்படுத்திக் கொள்கிறது.
திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட திட்டங்களுக்கு தூத்துக்குடியைச் சேர்ந்த தவெக அமைச்சர்கள் திறப்பு விழா நடத்தலாம். ஆனால், அந்தத் திட்டங்களின் பின்னணியில் உள்ள வரலாற்றையும், அவற்றைச் செயல்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளையும் மறைத்துவிட முடியாது.
தூத்துக்குடி தொகுதியில் திமுக ஆட்சிக்காலத்தில் திட்டமிடப்பட்டு, செயல்படுத்தப்பட்ட பணிகளில், தங்கம்மாள்புரம் மாநகராட்சித் தொடக்கப் பள்ளியின் புதிய கட்டடம், அய்யன்கோவில் தெருவில் புதிய எரிவாயுத் தகனமேடைக் கட்டடம் ஆகியவை அடங்கும்.
மேலும், டைமண்ட் காலனி எஃப்.சி.ஐ. குடோன் பகுதியில் பக்கவாட்டுச் சுவர் மற்றும் பாலம் அமைக்கும் பணி, கந்தன் காலனி மற்றும் குரூஸ்புரத்தில் பக்கிள் ஓடை மேம்பாட்டுப் பணிகள், சீரமைக்கப்பட்ட கோக்கூர் குளம், செயின்ட் மேரிஸ் காலனியில் புதிதாகக் கட்டப்பட்ட பூங்கா ஆகிய பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.
இதுதவிர, சிறுபாடு கிராமத்தில் நியாயவிலைக் கடை, மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்கு உட்பட்ட ஹவுசிங் போர்டு காலனி, தேரஸ் நகர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அருகில் மற்றும் சுனாமி காலனி ஆகிய பகுதிகளில் அங்கன்வாடிக் கட்டடங்கள் அமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.
குருக்குச்சாலை அரசு பள்ளி வளாகத்தில் சமையலறைக் கட்டடம் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் படர்ந்தபுளியில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு அமைக்கும் பணிகளும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
இத்திட்டங்கள் அனைத்தும் திமுக ஆட்சிக்காலத்தில் திட்டமிடப்பட்டு, முன்னெடுக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்காகச் செயல்படுத்தப்பட்ட பணிகள் என அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியது யார்? அதற்கான நிதியை ஒதுக்கியது யார்? பணிகளை முன்னெடுத்து நடைமுறைப்படுத்தியது யார்? என்ற கேள்விகளுக்கு விடை காண வேண்டும். திட்டமிட்டது திமுக, நிதி ஒதுக்கியது திமுக, பணிகளை முன்னெடுத்ததும் திமுக. ஆனால், தற்போது திறப்பு விழா நடத்திவிட்டு அந்தச் சாதனைகளைத் தங்களுடையதாகக் காட்டிக்கொள்வது எந்த வகையில் நியாயம் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
திட்டங்களுக்கு யார் வேண்டுமானாலும் திறப்பு விழா நடத்தலாம். ஆனால், அந்தத் திட்டங்களுக்காக உழைத்தவர்களின் பங்களிப்பை மறைத்துவிட்டு வரலாற்றை மாற்றி எழுத முடியாது. திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட திட்டங்களுக்குத் திறப்பு விழா நடத்திவிட்டு, அவற்றைத் தங்களது சாதனைகளாக விளம்பரப்படுத்திக் கொள்வதும், சுயதம்பட்டம் அடித்துக் கொள்வதும் தவெகவின் அரசியல் பாணியாக இருக்கலாம்.
ரிப்பன் வெட்டியதால் மட்டுமே ஒருவர் ஒரு திட்டத்தின் சாதனைக்குச் சொந்தக்காரராகிவிட முடியாது. உண்மையான சாதனைகளுக்குச் சொந்தக்காரர்கள் யார் என்பதைத் தூத்துக்குடி மக்கள் நன்கு அறிவார்கள்.
இவ்வாறு கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.