தூத்துக்குடி உப்பளப் பகுதிகளில் கப்பல் கட்டும் தளம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட்டு, மாற்று இடத்தில் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் உப்பு உற்பத்தியாளர்கள், தங்களது போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கக் கோரி அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத்தின் புதிய நிர்வாகிகளை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் முள்ளக்காடு, முத்தையாபுரம், கோவளம், பசுவந்தனை, தன்பாடு உள்ளிட்ட பகுதிகளில் சிறிய அளவிலான உப்பு உற்பத்தி நடைபெற்று வருகிறது. இப்பகுதிகளில் கப்பல் கட்டும் தளம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, உப்பளங்களைப் பாதுகாக்க வேண்டும் என உப்பு உற்பத்தியாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
கப்பல் கட்டும் தளத்தை மாற்று இடத்தில் அமைக்கக் கோரி, கோவளம்–பசுவந்தனை–தன்பாடு சிறிய அளவு உப்பு உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். மேலும், தங்களது கோரிக்கைக்கு ஆதரவு திரட்டும் வகையில் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆதரவு கோரி வருகின்றனர்.
புதிய நிர்வாகிகளிடம் கோரிக்கை மனு
இந்நிலையில், தூத்துக்குடி அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத்தின் புதிய நிர்வாகிகளாகத் தலைவர் ஜே. ஜேசியா வில்லவராயர், பொதுச் செயலாளர் பிரேம்பால் நாயகம், பொருளாளர் பொன்குமரன் ஆகியோர் பொறுப்பேற்றுள்ளனர்.
இதைத்தொடர்ந்து, சங்கத் தலைவர் ஜே. ஜேசியா வில்லவராயரை உப்பு உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்தனர். அப்போது, உப்பளப் பகுதிகளில் கப்பல் கட்டும் தளம் அமைக்கும் திட்டத்தால் உப்பு உற்பத்தித் தொழிலுக்கும், அதை நம்பியுள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்கும் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து எடுத்துரைத்தனர்.
மேலும், பாரம்பரியமாக நடைபெற்று வரும் உப்பு உற்பத்தித் தொழிலைப் பாதுகாக்கவும், உப்பளங்களை அழிவிலிருந்து காக்கவும், கப்பல் கட்டும் தளத்தை மாற்று இடத்தில் அமைக்க வலியுறுத்தி நடைபெறும் போராட்டத்துக்கு அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கம் ஆதரவு அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து மனு அளித்தனர்.
இந்தச் சந்திப்பின்போது, உப்பு உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் சேகர் தலைமையில் பொன்ராஜ், ரகுபதி, முகேஷ், சண்முகவேல், பாலசுப்ரமணியன், எல்.ஆர். சிவாகர், ராமர், பால்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.