தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைக் கண்டித்து, ‘ஜனநாயகம் காப்போம்’ என்ற முழக்கத்துடன் தூத்துக்குடியில் வருகிற 14-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என இந்தியா கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இந்தியா கூட்டணி சார்பில் தேர்தல் நடைமுறைகளில் நடைபெறுவதாகக் கூறப்படும் வாக்குத் திருட்டு மற்றும் முறைகேடுகளைக் கண்டித்து, நாடு தழுவிய அளவில் வருகிற 13 மற்றும் 14-ம் தேதிகளில் மாபெரும் கண்டனப் போராட்டங்கள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி ஒருங்கிணைந்த மாவட்ட இந்தியா கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் புதுக்கிராமம் பகுதியில் உள்ள ஆல்வின் மீட்டிங் ஹாலில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர் எஸ்.எம். சகாயராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்தில், தமிழக காங்கிரஸ் கமிட்டி மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தேசியத் தலைமை அறிவுறுத்தலின்படி, தூத்துக்குடி விவிடி சிக்னல் பகுதியில் வருகிற 14-ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்துக்கான முன்னேற்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பெருமாள்சாமி, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் சங்கர் ஆகியோர் ஆலோசனைகளை வழங்கிப் பேசினர்.
தொடர்ந்து, மாநில பொதுக்குழு உறுப்பினர் அந்தோணி சுரேஷ், தூத்துக்குடி தெற்கு மாவட்ட மதிமுக செயலாளர் ரஞ்சன், வடக்கு மாவட்ட மதிமுக அவைத் தலைவர் பேச்சிராஜ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மண்டலச் செயலாளர் வழக்கறிஞர் ராஜ்குமார், மேலிடப் பொறுப்பாளர் தமிழினியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் கே.எஸ். அர்ச்சுனன் ஆகியோர் பேசினர்.
மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கே.பி. ஆறுமுகம், முருகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ராஜா, சிவராமன், மாநகரச் செயலாளர் முத்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலாளர் பாஜுல் அஸ்ஹாப், மதிமுக நகரச் செயலாளர் முருக பூபதி உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தை ஒருங்கிணைப்பது குறித்த தங்களது கருத்துகளைத் தெரிவித்தனர்.

கூட்டத்தில், கண்டன ஆர்ப்பாட்டத்தில் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாகப் பங்கேற்பது, போராட்டம் குறித்த தகவல்களைப் பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பது உள்ளிட்ட முன்னேற்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
நிர்வாகிகள் பங்கேற்பு
கூட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் சேகர், ஐசன் சில்வா, நிர்மல் கிறிஸ்டோபர், ஏ.டி.எஸ். அருள், கோபால், மைக்கேல் பிரபாகர், ஜான் பிரிட்டோ, ஜேம்ஸ் லாரன்ஸ், ரஞ்சிதம் ஜெபராஜ், ஏ.டி. பிரபாகரன், டேவிட் வசந்தகுமார், நேரு, அசன் பாத், பாலகிருஷ்ணன், பி.ஜே.சி. சுரேஷ், ராதாகிருஷ்ணன், ஏரல் ஜெயராஜ், ஏ.டி. தனசேகரன், பிராங்க்ளின் ஜோஸ், சேவியரம்மாள், பார்த்திபன், சிமியோன், ராஜாராம் முத்துமணி, கணேசன், டோமினிக், இசக்கியம்மாள், பிளசி பியோ வினா, ரெனிஸ் பாபு, ஆலன் ஜோஸ்வா, ராஜ்குமார், தனிஸ் லாஸ், பிராங்க்ளின், பெனட்டிட், சகாய புஷ்பராஜ், ராஜரத்தினம், வேல்குமார், ஜெயபாண்டியன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடியில் வருகிற 14-ம் தேதி நடைபெறவுள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாகப் பங்கேற்க வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.