தூத்துக்குடி உப்பளப் பகுதிகளில் கப்பல் கட்டும் தளம் அமைக்கும் திட்டத்தை கைவிட்டு, மாற்று இடத்தில் அமைக்க வலியுறுத்தி தொடர்ந்து போராடி வரும் உப்பு உற்பத்தியாளர்கள், பாமக எம்.எல்.ஏ. சௌமியா அன்புமணியை தூத்துக்குடி விமான நிலையத்தில் சந்தித்து, தங்களது போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கக் கோரி மனு அளித்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் முள்ளக்காடு, முத்தையாபுரம், கோவளம், பசுவந்தனை, தன்பாடு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான சிறிய அளவிலான உப்பு உற்பத்தியாளர்கள் உப்பளத் தொழிலை நம்பி வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், உப்பளப் பகுதிகளை உள்ளடக்கிய இடத்தில் கப்பல் கட்டும் தளம் அமைக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, உப்பளங்களை பாதுகாக்க வேண்டும், கப்பல் கட்டும் தளத்தை மாற்று இடத்தில் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி உப்பு உற்பத்தியாளர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், தங்களது கோரிக்கைக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் ஆதரவை திரட்டி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, தென் மாவட்டங்களில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுவிட்டு சென்னை செல்வதற்காக தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்த பாட்டாளி மக்கள் கட்சி எம்.எல்.ஏ. சௌமியா அன்புமணியை, தூத்துக்குடி உப்பு உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் சந்தித்தனர்.
சங்கத் தலைவர் சேகர் தலைமையில் பொருளாளர் பொன்ராஜ் மற்றும் நிர்வாகிகள் ரகுபதி, முகேஷ், சண்முகவேல், பாலசுப்ரமணியன், எல்.ஆர். சிவாகர், வக்கீல் பாஸ்கர், பால்ராஜ் உள்ளிட்டோர் சௌமியா அன்புமணியை சந்தித்து மனு அளித்தனர்.
அந்த மனுவில், உப்பளத் தொழிலை நம்பி வாழும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் உப்பு உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, உப்பளப் பகுதிகளில் கப்பல் கட்டும் தளம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். கப்பல் கட்டும் தளத்தை மாற்று இடத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உப்பளங்களை பாதுகாக்க தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பதுடன், இந்த விவகாரம் தொடர்பாக சட்டமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
மேலும், இதுதொடர்பாக ஏற்கனவே சென்னையில் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி.யை நேரில் சந்தித்து மனு அளித்து, ஆதரவு கோரியதையும் உப்பு உற்பத்தியாளர்கள் சௌமியா அன்புமணியிடம் நினைவுபடுத்தினர்.
மனுவை பெற்றுக்கொண்ட சௌமியா அன்புமணி, உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்ததுடன், உப்பளங்களை பாதுகாப்பதற்கான அவர்களின் முயற்சிகளுக்கு உறுதியாக துணை நிற்பதாகவும், கோரிக்கை தொடர்பாக சட்டமன்றத்தில் குரல் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்ததாக உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
உப்பளங்களை பாதுகாத்து பாரம்பரிய உப்பு உற்பத்தித் தொழிலையும், அதனை நம்பியுள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் உப்பு உற்பத்தியாளர்கள் தொடர்ந்து பல்வேறு தரப்பினரிடம் ஆதரவு திரட்டி வருவது குறிப்பிடத்தக்கது.