நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, மாணவர்களின் உயர்கல்வி வளர்ச்சி, பெண்களின் முன்னேற்றம், பொருளாதார சுயசார்பு மற்றும் சமூக மேம்பாட்டிற்காக திமுக அரசுகள் செயல்படுத்திய பல்வேறு திட்டங்களை எடுத்துரைத்தார்.
பெண்கள் முன்னேற்றத்திற்காக திமுக அரசுகளின் திட்டங்கள்!
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் பெண்களின் கல்வி, வேலைவாய்ப்பு, சமூகப் பாதுகாப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் வகையில் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு, பெண்களின் உயர்கல்வியை ஊக்குவிக்கும் உதவித் திட்டங்கள், ஏழைப் பெண்களின் திருமண உதவித் திட்டங்கள் மற்றும் மகப்பேறு நிதியுதவி போன்ற பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

தொடர்ந்து, முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் பெண்களின் அன்றாட வாழ்க்கை, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார சுதந்திரத்தை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
பெண்கள் அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றிப் பயணம் செய்யும் விடியல் பயணத் திட்டம், தகுதியுள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டம், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டம் ஆகியவை பெண்களின் முன்னேற்றத்திற்கான முக்கியத் திட்டங்களாகும்.
மேலும், பணிபுரியும் பெண்களுக்கான தங்கும் விடுதிகள், மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கான கடன் வசதிகள், பெண்கள் தொழில் தொடங்குவதற்கான ஊக்குவிப்பு நடவடிக்கைகள் மற்றும் அரசுப் பணிகளில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பெண்கள் கல்வி கற்று சுயமாக வருமானம் ஈட்டவும், குடும்பத்தின் பொருளாதார நிலையை உயர்த்தவும், சமூகத்தில் சம உரிமையுடன் முன்னேறவும் இத்தகைய திட்டங்கள் உதவுகின்றன என அவர் எடுத்துரைத்தார்.

உயர்கல்விக்குக் கைகொடுக்கும் கல்விக் கடன் முகாம்!
தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் உயர்கல்வி பயில்வதற்குத் தேவையான நிதி உதவிகளைப் பெறுவதற்கான வாய்ப்புகளை அறிந்துகொள்ளும் வகையில் இந்தக் கல்விக் கடன் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.
பல்வேறு வங்கிகளின் மூலம் கல்விக் கடன் பெறுவதற்கான நடைமுறைகள், தகுதிகள், தேவையான ஆவணங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறைகள் குறித்து மாணவர்கள் தெரிந்துகொள்ள இந்த முகாம் உதவியாக அமையும்.
பொருளாதாரச் சூழல் காரணமாக மாணவர்களின் உயர்கல்வி பாதிக்கப்படாமல் இருப்பதற்கும், தகுதியுள்ள மாணவர்கள் தங்களது கல்விக் கனவுகளை நிறைவேற்றுவதற்கும் கல்விக் கடன் வாய்ப்புகள் முக்கியமானவை.
எனவே, தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் அனைவரும் இந்த முகாமில் பங்கேற்று, தங்களது உயர்கல்விக்குத் தேவையான கடன் வாய்ப்புகள் குறித்து அறிந்து பயன்பெற வேண்டும் என்று கனிமொழி கருணாநிதி கேட்டுக்கொண்டார்.

முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்பு!
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் குரு சந்திரன், ஸ்டேட் வங்கியின் மண்டல மேலாளர் மகேஷ், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மண்டல மேலாளர் ஜெயந்த், தூத்துக்குடி மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் விநாயகமூர்த்தி, தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் பொது மேலாளர் ஆனந்த் கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.