தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டலத்துக்கு உட்பட்ட முத்தையாபுரம் பகுதியில், உப்பாத்து ஓடை ரவுண்டானா முதல் தோப்பு தெரு வரை சாலையோரங்களில் பாதுகாப்பற்ற முறையில் நிறுத்தப்படும் கனரக வாகனங்களால் சாலை விபத்துகள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாகவும், பொதுமக்களின் உயிரைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியரிடம் ஊர் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
முத்தையாபுரம் பகுதியில் சுமார் 15 ஆயிரம் வாக்காளர்களும், 50 ஆயிரத்தை நெருங்கும் மக்கள் தொகையும் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பகுதியில் கே.டி.கே. உயர்நிலைப் பள்ளி, ஏ.வி.எஸ். தொடக்கப்பள்ளி, சாண்டி ஆங்கிலப் பள்ளி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், உப்பாத்து ஓடை ரவுண்டானா முதல் முத்தையாபுரம் தோப்பு தெரு வரையிலான சாலைகளில் கனரக வாகனங்கள் அதிக அளவில் செல்வதுடன், சாலையோரங்களில் பாதுகாப்பற்ற முறையில் நிறுத்தப்படுவதாகப் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், கார்கள், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவை சிரமத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, எதிரெதிரே வாகனங்கள் வரும்போது சாலையோரங்களில் நிறுத்தப்பட்டுள்ள கனரக வாகனங்களைக் கடந்து செல்ல வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாத பகுதிகளில் நிறுத்தப்படும் வாகனங்கள் விபத்துகளுக்கு வழிவகுக்கும் அபாயமும் உள்ளதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், பள்ளி மாணவர்கள் சாலையைக் கடக்கும் நேரங்களிலும், பொதுமக்கள் வேலைக்குச் சென்று திரும்பும் நேரங்களிலும் விபத்து அபாயம் அதிகமாக இருப்பதால், அப்பகுதி மக்கள் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய சூழல் நிலவுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, சாலையோரங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் கனரக வாகனங்களை அகற்ற வேண்டும். விபத்து அபாயம் அதிகமுள்ள இடங்களில் எச்சரிக்கைப் பலகைகள் அமைக்க வேண்டும். பள்ளிகள் அருகே மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தேவையான போக்குவரத்து ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். இரவு நேரங்களில் தெருவிளக்குகள் மற்றும் எச்சரிக்கைப் பிரதிபலிப்பான்களை அமைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், போக்குவரத்துக் காவல்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட சாலைகளை நேரில் ஆய்வு செய்து, கனரக வாகனங்களின் போக்குவரத்து மற்றும் நிறுத்தத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். விதிமீறலில் ஈடுபடும் வாகனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகரிக்கும் முன்பாக, மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி மற்றும் காவல்துறை இணைந்து உடனடி நடவடிக்கை எடுத்து முத்தையாபுரம் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் முத்தையாபுரம் ஊர் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.