தூத்துக்குடி வி.வி.டி சிக்னல் இன்று மாலை சாதாரண போக்குவரத்து நெரிசலால் அல்ல, அரசியல் நெரிசலால் ‘ரெட்’ ஆனது. ஒரே நேரத்தில், ஒரே இடத்தில், இரண்டு வேறு அரசுகளை குறிவைத்து முழக்கங்கள் முழங்கியதால், அந்த பகுதி சில நேரம் ‘லைவ் அரசியல் மேடை’யாக மாறியது.
முதலில், சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து கேள்வி எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். “வாக்குறுதி எங்கே?”, “காலிப்பணியிடங்கள் நிரப்புங்கள்” என கோஷங்கள் ஒலித்தன. வேலைப்பளு அதிகரித்துவிட்டதாகவும், வாக்குறுதிகள் இன்னும் காத்திருப்பில் உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
அதே நேரத்தில், அருகிலேயே திமுக தலைமையிலான கூட்டணி, ஒன்றிய பட்ஜெட்டை எதிர்த்து மத்திய அரசை சாடி ஆர்ப்பாட்டம் நடத்தியது. “தமிழகத்திற்கு நிதி எங்கே?” என்ற கேள்வியும் அங்கு முழங்கியது.

ஒருபக்கம் மாநில அரசிடம் வாக்குறுதி கேள்வி… மறுபக்கம் மத்திய அரசிடம் நிதி கேள்வி… நடுவில் சிக்கியது வி.வி.டி சிக்னல்!
அங்கு சென்ற சில பொதுமக்கள், “இங்கே யாரை ஆதரிக்கணும்? யாரை எதிர்க்கணும்?” என சிரிப்புடன் பேசிக்கொண்டதாக கூறப்படுகிறது. சிலர் “ஒரே சிக்னலில் டபுள் டோஸ் அரசியல்!” என நகைச்சுவையாக கருத்து தெரிவித்தனர்.
இரண்டு ஆர்ப்பாட்டங்களும் அமைதியாக முடிந்தாலும், அந்த மாலை வி.வி.டி சிக்னல் அரசியல் ‘டிரெண்டிங் ஸ்பாட்’ ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.