தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பண்டுகரை சாலை தற்போது தரமற்ற நிலையில் குண்டும் குழியுமாக மாறி, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அனுபவித்து வருகின்றனர். குறிப்பாக மழைக்காலங்களில் சாலையில் நீர் தேங்குவதால் போக்குவரத்து பாதிப்பு அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற மண்டல கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில், மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா முன்னிலையில் நடைபெற்றது.
கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில், “பண்டுகரை சாலையின் சேதமடைந்த நிலை குறித்து பொதுமக்களிடமிருந்து தொடர்ந்து கோரிக்கைகள் வந்துள்ளன. பொதுமக்களின் பாதுகாப்பும், சீரான போக்குவரத்தும் மாநகராட்சியின் முதன்மை பொறுப்பு. எனவே, சம்பந்தப்பட்ட பொறியியல் பிரிவு அதிகாரிகள் உடனடி ஆய்வு மேற்கொண்டு, சாலையை முழுமையாக சீரமைக்கும் பணிகளை விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று அறிவுறுத்தினார்.
மேலும், தற்காலிக சீரமைப்பை மட்டும் அல்லாது, நீடித்த தீர்வாக முழுமையான சாலை மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் உறுதி அளித்தார்.