தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் காவல்துறை மேற்கொண்டு வரும் தீவிர நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, தடை செய்யப்பட்ட பீடி இலைகளை சரக்கு வாகனத்தில் கடத்தி வந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிறுப்பாடு பகுதியில், இன்று (09.02.2026) புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் முருகன் தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த ஒரு சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
சோதனையில், தூத்துக்குடியைச் சேர்ந்த சஞ்சய் குமார் (26) என்பவர், சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட பீடி இலைகளை அந்த சரக்கு வாகனத்தில் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் உடனடியாக குற்றச் செயலில் ஈடுபட்ட சஞ்சய் குமாரை கைது செய்தனர்.
அவரிடமிருந்து ரூபாய் 16 லட்சம் மதிப்புள்ள, தடை செய்யப்பட்ட 52 பீடி இலை பண்டல்கள் மற்றும் அவற்றை கடத்த பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து மேலான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரோந்து மற்றும் வாகன தணிக்கை பணியின் போது துரிதமாக செயல்பட்டு, சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட தடை செய்யப்பட்ட பீடி இலைகளை பறிமுதல் செய்ததோடு, கடத்தலில் ஈடுபட்ட அந்த நபரை கைது செய்த புதுக்கோட்டை காவல் நிலைய போலீசாரின் பணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் பாராட்டினார்.