தூத்துக்குடி மாவட்டத்தில் நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டு, நீண்ட காலமாக தலைமறைவாக இருந்து வந்த நபரை கைது செய்யும் வகையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை. சிலம்பரசன், அனைத்து காவல் நிலைய எல்லைகளிலும் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவிட்டார்.
அதன்படி, கடந்த 1997ஆம் ஆண்டு முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சேகர் (54/26) என்பவர், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இதையடுத்து, கடந்த 2001ஆம் ஆண்டு குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்–II, சம்பந்தப்பட்ட எதிரிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது.
இதனைத் தொடர்ந்து, தலைமறைவாக இருந்து வந்த சேகரை கைது செய்யும் பொருட்டு, தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சுனில் அவர்களின் மேற்பார்வையில், முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த், சார்பு ஆய்வாளர் முகிலரசன் மற்றும் போலீசார் இணைந்து, பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
நீண்ட காலமாக இடம் மாறி மறைந்து வாழ்ந்து வந்த சேகரின் நடமாட்டத்தை ரகசியமாக கண்காணித்து வந்த போலீசார், இன்று (09.02.2026) அவரை கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டு, 25 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த எதிரியை கைது செய்த காவல்துறையினரின் இந்த சிறப்பான நடவடிக்கையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை. சிலம்பரசன் பாராட்டினார்.