சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் “பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” திட்டத்தின் கீழ், மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு திட்டத்தின் கீழ் சிறப்பாக செயல்பட்டு வரும் மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் கீதா ஜீவன் பேசுகையில்,
“பெண் குழந்தைகளின் கல்வியே சமூக முன்னேற்றத்தின் அடித்தளம். பெண் குழந்தைகள் பாதுகாப்புடன் வளரவும், கல்வியில் சிறந்து விளங்கவும் தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் பெண் குழந்தைகள் பள்ளிக் கல்வியில் தொடர்ந்து ஈடுபட்டு உயர்ந்த இலக்குகளை அடைய ஊக்குவிக்கப்படுகின்றனர்” என்றார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் பேசுகையில்,
“பெண் குழந்தைகளின் கல்வி தொடர்ச்சி உறுதி செய்யப்படுவதன் மூலம் குடும்பங்களும், சமுதாயமும் வளர்ச்சி அடையும். அரசு திட்டங்களை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அதிகாரிகள், கல்வித் துறை அலுவலர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.