தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்குட்பட்ட 33-வது வார்டு மில்லர்புரம் பகுதியில், அனுமதியின்றி நிலத்தடி நீரை உறிஞ்சி குடிநீராக சுத்திகரித்து வணிக நிறுவனங்களுக்கு விற்பனை செய்து வந்த தனியார் நிறுவனத்தை மாநகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.
மில்லர்புரம் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்று நிலத்தடி நீரை சட்டவிரோதமாக உறிஞ்சி, அதனை குடிநீராக சுத்திகரிப்பு செய்து பல்வேறு வணிக நிறுவனங்களுக்கு விற்பனை செய்து வருவதாக மாநகராட்சிக்கு பொதுமக்களிடமிருந்து புகார்கள் வந்தன. இதையடுத்து, தூத்துக்குடி மாநகராட்சி அலுவலர்கள் சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் நேரில் கள ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின்போது, அந்நிறுவனம் உணவு பாதுகாப்புத் துறையிடம் முறையான அனுமதி பெறாமல் குடிநீர் சுத்திகரிப்பு மற்றும் விற்பனைப் பணியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. மேலும், குடியிருப்பு பயன்பாட்டிற்காக உள்ள இடத்தை வணிக நோக்கில் பயன்படுத்தி வந்ததுடன், மாநகராட்சி சுகாதாரப் பிரிவிடமும் உரிய அனுமதி பெறாமல் நிறுவனம் செயல்பட்டு வந்தது ஆய்வில் கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அனுமதியின்றி நிலத்தடி நீரை உறிஞ்சி குடிநீராக சுத்திகரித்து விற்பனை செய்து வந்த அந்த நிறுவனத்தின் செயல்பாட்டைத் தடுத்து நிறுத்த மாநகராட்சி ஆணையாளர் உத்தரவிட்டார்.
அதன்பேரில், இன்று (நவம்பர் 25) காலை 11 மணியளவில் மாநகராட்சி மேற்கு மண்டல உதவி ஆணையாளர் மற்றும் சுகாதார அலுவலர் ஆகியோர் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்குச் சென்று, நிறுவனத்தைப் பூட்டி சீல் வைத்தனர்.
அனுமதியின்றி செயல்பட்டால் நடவடிக்கை!
இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாநகராட்சிப் பகுதிகளில் இதுபோன்று உரிய அனுமதியின்றி நிலத்தடி நீரை உறிஞ்சி வணிகப் பயன்பாட்டிற்காகச் செயல்படும் தனியார் நிறுவனங்கள் கண்டறியப்பட்டால், அவற்றின் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்துள்ளது.
நிலத்தடி நீர் வளத்தைப் பாதுகாப்பதுடன், பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீரின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. மேலும், மாநகராட்சிப் பகுதிகளில் இதுபோன்ற அனுமதியற்ற குடிநீர் விற்பனை நிறுவனங்கள் செயல்படுகிறதா என்பது குறித்தும் கண்காணிப்பு அவசியம் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே எழுந்துள்ளது.