மதுரை மாவட்டம் செக்கானூரணி காவல் நிலையத்தில் பாலகிருஷ்ணன் உயிரிழந்த விவகாரத்தில், தமிழக அரசையும் காவல்துறையையும் கடுமையாக விமர்சித்துள்ள தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி, இவ்வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் பாலகிருஷ்ணன் உயிரிழந்த விவகாரத்தில், அவர் சட்டவிரோதமாகக் காவலில் வைக்கப்பட்டு, காவல்துறையினரின் சித்திரவதையால் உயிரிழந்துள்ளதாகவும், சம்பவத்தின்போது காவல் நிலையத்தில் இருந்த அனைத்து காவலர்களும் கைது செய்யப்படத் தகுதியானவர்கள் என்றும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கடுமையாகக் கண்டித்துள்ளது.
புகார் அளிக்க வந்தவரையே தாக்கிச் சித்திரவதை செய்துவிட்டு, அதனைத் தற்கொலை என தவெக அரசு நாடகமாடியிருக்கிறது. இந்த விவகாரத்தில் இன்னும் எத்தனை உண்மைகளை இந்த அரசு மறைக்கப் போகிறது?
இந்த மரணம் தொடர்பாக சமரசம் செய்துகொள்ள ரூ.3 லட்சம் பணமும், அரசு வேலையும் வழங்குவதாகக் காவல்துறையினர் கூறியதாக பாலகிருஷ்ணனின் மனைவி சுதா குற்றம்சாட்டியுள்ளார். இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு தமிழக அரசு என்ன பதிலளிக்கப் போகிறது?
பாதிக்கப்பட்டவர்களை ஒடுக்குவதும், குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்களைக் காப்பாற்றுவதும்தான் இந்த அரசின் ஒரே கொள்கையா? பொய்களை மட்டுமே பேசி ஆட்சி செய்யும் இந்த ஆட்சியில், பாலகிருஷ்ணனின் உயிரிழப்புக்கு உரிய நீதி கிடைப்பது கடினம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, இந்த வழக்கில் உண்மைகள் முழுமையாக வெளிவரவும், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நீதி கிடைக்கவும், வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்.
இவ்வாறு கனிமொழி எம்.பி. தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
காவல் நிலையத்தில் உயிரிழந்த பாலகிருஷ்ணனுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், இந்த மரணத்தின் பின்னணியில் உள்ள உண்மைகள் வெளிச்சத்துக்கு வர வேண்டும் என்றும் கனிமொழி முன்வைத்துள்ள கோரிக்கை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.