கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மகனை மண்வெட்டியால் தாக்கி கொலை செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்து, தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம்–II தீர்ப்பளித்தது.
கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த பிரியாத்தி என்பவர், கடந்த 2024ஆம் ஆண்டு தனது மகன் பாலமுருகனை மண்வெட்டியால் தாக்கி கொலை செய்தார். இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம்–IIல் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பிரீத்தா, குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து, எதிரி பிரியாத்திக்கு பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கில் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தண்டனை பெற்றுத் தந்த கோவில்பட்டி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ஜெகநாதன், வழக்கை திறம்பட விசாரித்த கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் சேவியர் ஞானபிரகாசம் ஆகியோரை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை. சிலம்பரசன் பாராட்டினார்.
பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட கொலை வழக்கில், துரித விசாரணை நடத்தி தண்டனை வழங்கப்பட்ட முதல் வழக்கு இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.