தேர்தல் வாக்குறுதியின்படி, 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் கூட்டுறவுப் பயிர்க் கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வித லீடர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“தவெக அரசு தனது தேர்தல் அறிக்கையில், 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் கூட்டுறவுப் பயிர்க் கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்வதாக உறுதியளித்தது. அந்த வாக்குறுதியை நம்பியே விவசாயிகள் அரசுக்கு ஆதரவு அளித்தனர்.
ஆனால், தற்போது ரூ.75,000 வரையிலான கடன் தொகை மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிருப்தியடைந்த விவசாயிகள், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தங்களைத் தாங்களே சாட்டையால் அடித்துக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 1970-ஆம் ஆண்டு இதே நாளில், விவசாயத்துக்கு வழங்கப்பட்ட மின்சாரக் கட்டண உயர்வை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று விவசாயிகள் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். அந்த துயர சம்பவம் நடைபெற்ற நாளிலேயே, 56 ஆண்டுகள் கடந்த பின்னரும், விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தங்களையே வருத்திக் கொள்ளும் நிலை ஏற்பட்டிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.
மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றுவது எந்த அரசின் அடிப்படை கடமையாகும். கடந்த ஆட்சியில் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததால் மாற்றத்தை எதிர்பார்த்த மக்கள் தற்போதைய அரசைத் தேர்ந்தெடுத்தனர். ஆனால் பெயரில் மட்டுமே மாற்றம் இருந்து, நடைமுறையில் மாற்றம் இல்லாத நிலை காணப்படுவது வருத்தமளிக்கிறது.
எனவே, தவெக அரசு தனது தேர்தல் வாக்குறுதியின்படி, 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் கூட்டுறவுப் பயிர்க் கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும், விவசாயிகளை வேதனைப்படுத்தும் சூழலைத் தவிர்த்து, அவர்களின் நலனை முன்னிறுத்தும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.