பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தூத்துக்குடி கிழக்கு மண்டலத்தின் சார்பில் இரண்டாம் கேட்டு பத்திரகாளி அம்மன் கோவில் அருகே பிப்.27-ஆம் தேதி தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கிழக்கு மண்டல தலைவர் ராஜேஷ் கனி தலைமை வகித்து உரையாற்றினார். அப்போது அவர் தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகத்தில் நடைபெற்று வரும் பல்வேறு முறைகேடுகள் மற்றும் குளறுபடிகள் குறித்து கடுமையாக விமர்சித்தார்.
“மக்கள் அடிப்படை வசதிகளுக்காக காத்திருக்கின்றனர். கழிவுநீர் வடிகால், சாலை அமைப்பு போன்ற பணிகளில் உரிய கவனம் இல்லை. ஒதுக்கப்பட்ட நிதி முறையாக பயன்படுத்தப்படுகிறதா என்பது பொதுமக்களிடையே பெரிய கேள்விக்குறியாக உள்ளது,” என்றார்.
மேலும் அவர் பேசுகையில், “மத்திய அரசு அமைக்கும் சாலைகள் வாகனங்கள் செல்லும் போது மங்கள இசை கேட்கும் அளவுக்கு தரமாக உள்ளன. ஆனால் தூத்துக்குடியில் சாலைகளில் உள்ள பள்ளங்களில் வாகனங்கள் விழுந்தால், அந்த குடும்பங்களில் சங்கு ஓசை கேட்கும் நிலை உருவாகியுள்ளது. இது நகைச்சுவையாக அல்ல; மக்களின் வேதனையை வெளிப்படுத்தும் உண்மை,” என்று கடுமையாக விமர்சித்தார்.
சாலைகள் சேதமடைந்ததால் பொதுமக்கள் அன்றாடம் அவதிப்படுகின்றனர் என்றும், உடனடி சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படாவிட்டால் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டிய சூழல் உருவாகும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட துணைத் தலைவர் சண்முகசுந்தரம், ஓபிசி மாநில செயற்குழு உறுப்பினர் பாலமுருகன், கிழக்கு மண்டல பொதுச்செயலாளர்கள் சண்முகசுந்தரம், லட்சுமி, வேல்கனி, கெறையரா, மண்டல செயலாளர்கள் மற்றும் துணைத் தலைவர்கள் பாலகிருஷ்ணன், கந்தசாமி, ஜெயரூபி, ஹரி, அணி பிரிவு நிர்வாகிகள் பிதலிஸ், உஷா தேவி, ஓம் பிரபு, பிரியா உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.