இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடி, சுதேசி கப்பல் நிறுவனத்தைத் தொடங்கி நாட்டின் விடுதலைக்காகத் தனது வாழ்நாளையே அர்ப்பணித்த கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாரின் 90-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி, தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள வ.உ.சிதம்பரனாரின் திருவுருவச் சிலைக்கு, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் வ.உ.சிதம்பரனாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதில், தூத்துக்குடி மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, பகுதி மற்றும் வட்டக் கழகச் செயலாளர்கள், நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு வ.உ.சிதம்பரனாரின் தியாகத்தையும், நாட்டின் விடுதலைக்காக அவர் ஆற்றிய அரும்பணிகளையும் நினைவுகூர்ந்து மரியாதை செலுத்தினர்.
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் தியாக வரலாற்றை இளைய தலைமுறையினருக்கு எடுத்துரைக்கும் வகையில் இந்த நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.