தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் பிளஸ்-1 மாணவியை கத்தியால் சரமாரியாகக் குத்தியும், கழுத்தை நெரித்தும் கொடூரமாகக் கொலை செய்த 23 வயது இளைஞரின் செயல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சாயர்புரம் அருகேயுள்ள வேதமாணிக்கபுரம் பகுதியைச் சேர்ந்த மாணவி (17), அப்பகுதியில் உள்ள செபத்தையாபுரம் முத்துமாலை அம்மன் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த முத்துராஜ் (23) என்பவர் வெல்டிங் பட்டறையில் வேலை பார்த்து வந்துள்ளார். இருவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் இரு வீட்டினருக்கும் தெரியவந்ததைத் தொடர்ந்து, மாணவியின் படிப்பு முடிந்த பின்னர் திருமணம் குறித்து பேசிக்கொள்ளலாம் என குடும்பத்தினர் அறிவுறுத்தியதாகத் தெரிகிறது. இதற்கிடையே, மாணவி வேறொரு நபருடன் செல்போனில் பேசுவதாக முத்துராஜ் சந்தேகமடைந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், சனிக்கிழமையான இன்று பள்ளி விடுமுறை என்பதால் மாணவி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அங்கு சென்ற முத்துராஜ், மாணவியிடம் செல்போனில் யாருடன் பேசுகிறாய் எனக் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த அவர், மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியை சரமாரியாகக் குத்தியதுடன், கழுத்தையும் நெரித்துக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, தானும் உயிரை மாய்த்துக்கொள்ளும் நோக்கில் கையை அறுத்துக்கொண்டது தெரிகிறது. இதுகுறித்து தகவலறிந்த சாயர்புரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த மாணவியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், தற்கொலைக்கு முயன்ற முத்துராஜை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இச்சம்பவம் குறித்து சாயர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பள்ளியில் படித்து வந்த இளம் மாணவி காதல் விவகாரத்தில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் சாயர்புரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.