தூத்துக்குடி – திருச்செந்தூர் பகுதிகளுக்கு புதிய அம்ரித் பாரத் விரைவு ரயில் சேவைகள் தொடங்க வேண்டும் என, தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் சித்ராங்கதன், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் அவர்களிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
அந்த மனுவில் அவர் தெரிவித்திருப்பதாவது:
நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து தூத்துக்குடிக்கு வந்து செல்லும் அனைத்து ரயில்களும் மேலூர் ரயில்வே நிலையத்தில் நின்று செல்ல மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டதற்கு, தூத்துக்குடி மாவட்ட மக்களின் சார்பில் மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த முடிவு, பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும், தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், வணிகர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் ஆன்மிகப் பயணிகள், சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு தினந்தோறும் பயணம் செய்து வருகின்றனர். ஆனால், நேரடி மற்றும் வசதியான ரயில் சேவைகள் போதிய அளவில் இல்லாததால், அவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இதனை கருத்தில் கொண்டு, தூத்துக்குடியிலிருந்து காலை 7.45 மணிக்கு புறப்பட்டு, மாலை 6.15 மணிக்கு தாம்பரம் அல்லது 6.45 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும் வகையில், ஒரு பகல் நேர அம்ரித் பாரத் விரைவு ரயில் இயக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
அதே ரயிலை மறுமார்க்கமாக, சென்னையிலிருந்து (எழும்பூர் இரவு 9.15 மணி / தாம்பரம் இரவு 9.40 மணி) புறப்பட்டு, திருநெல்வேலிக்கு காலை 8 மணிக்கும், திருச்செந்தூருக்கு காலை 10.10 மணிக்கும் சென்றடையும் வகையில், பழைய ஹவுரா எக்ஸ்பிரஸ் (12665/66, 12663/64) வழித்தடத்தை பயன்படுத்தி இயக்க முடியும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், திருச்செந்தூரிலிருந்து மாலை 3 மணிக்கு புறப்பட்டு, அதிகாலை 3.30 மணிக்கு சென்னை சென்றடையும் வகையில், கொள்ளம் மெயில் (16102) வழித்தடத்தை பயன்படுத்தி ரயிலை இயக்கி, பின்னர் அதே ரயிலை சென்னையிலிருந்து காலை 7.30 மணிக்கு புறப்படச் செய்து, மாலை 6 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும் மற்றொரு பகல் நேர சேவையாக மாற்றவும் வாய்ப்பு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் பகுதிகளைச் சார்ந்த பொதுமக்களின் நீண்டகால பயண தேவையை பூர்த்தி செய்யும் வகையில், இந்த வழித்தடத்தில் புதிய அம்ரித் பாரத் ரயில் சேவைகளை உடனடியாக தொடங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மாவட்ட தலைவர் சித்ராங்கதன் வலியுறுத்தியுள்ளார்.