தூத்துக்குடி மாநகராட்சி 39-வது வார்டு பகுதியில் பகுதி சபா கூட்டம், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தலைமையில் மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா, முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் 39 வது வார்டு கவுன்சிலர் சுரேஷ் குமார் துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் போது பொதுமக்கள், தூத்துக்குடி சிவன் கோயிலுக்கு சொந்தமான தெப்பக்குளம் கடந்த சில தினங்களுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட சீரமைப்பு பணியின் போது ஏற்பட்ட பழுதின் காரணமாக, இந்த ஆண்டு நடைபெற இருந்த தெப்பத் திருவிழா உற்சவம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இதற்கு பதிலளித்து மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில்,
“சிவன் கோயில் தெப்பக்குளம் சீரமைப்பு பணிகளின் போது ஏற்பட்ட தொழில்நுட்ப காரணங்களால் தற்போது தெப்பக்குளம் முழுமையாக பயன்படும் நிலையில் இல்லை. இந்த தெப்பக்குளம் பொதுப்பணித்துறை வசம் இருப்பதால், அவர்கள் ஸ்டெபிலிட்டி சர்டிபிகேட் அளிக்கும் பட்சத்தில் மாநகராட்சி நிர்வாகம் தெப்பத் திருவிழாவை பாதுகாப்புடன் நடத்த தயாராக உள்ளது. ஆனால் ஸ்டெபிலிட்டி சர்டிபிகேட் வழங்கப்படாத பட்சத்தில், இந்த ஆண்டு தெப்பத் திருவிழா உற்சவம் நடைபெறாது. இருப்பினும் தெப்பக்குளம் முழுமையாக சீரமைக்கப்பட்டு, அடுத்த ஆண்டு தெப்பத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும்” என்று உறுதி அளித்தார்.
மேலும் அவர்,
“மக்களின் நம்பிக்கையும், பாரம்பரியமும் மாநகராட்சிக்கு மிக முக்கியம். தெப்பக்குளம் சீரமைப்பு பணிகள் தரமாகவும், பாதுகாப்பாகவும் மேற்கொள்ளப்படும். ஆணையர் ப்ரியங்கா தலைமையில் அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து, பணிகளுக்கான வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பொதுமக்கள்,
சாலை வசதி, குடிநீர் விநியோகம், கழிவுநீர் கால்வாய் சீரமைப்பு, தெருவிளக்குகள் மற்றும் தூய்மை பணிகள் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் குறித்த கோரிக்கைகளையும் முன்வைத்தனர்.
இதற்கு பதிலளித்த மேயர்,
“பகுதி சபா கூட்டங்களில் முன்வைக்கப்படும் அனைத்து அடிப்படை தேவைகளும் முறையாக பதிவு செய்யப்பட்டு, காலக்கெடுவுடன் தீர்வு காணப்படும்” என்று தெரிவித்தார்.
இந்த பகுதி சபா கூட்டத்தில் 39-வது வார்டு கவுன்சிலர் சுரேஷ் குமார், வார்டு மக்களின் கோரிக்கைகளை மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையரின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
கூட்டம் முடிவில், பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகள் நேரடியாக கேட்கப்பட்டதையடுத்து திருப்தி தெரிவித்தனர்.