தூத்துக்குடி பாகம் பிரியாள் உடனுறை சங்கரராமேஸ்வரர் திருக்கோயில் (சிவன் கோயில்) நிர்வாக அலுவலராகப் பணியாற்றி வந்த தமிழ்ச்செல்வி தற்காலிக பணிநீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளார். அவர் மீது எழுந்த பல்வேறு புகார்கள் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்து சமய அறநிலையத்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற பாகம் பிரியாள் உடனுறை சங்கரராமேஸ்வரர் திருக்கோயிலில் நிர்வாக அலுவலராக தமிழ்ச்செல்வி கடந்த 4 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்தார். கோயில் நிர்வாகம் மற்றும் பணிகள் தொடர்பாக அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்ததாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் இணை ஆணையருக்கு தொடர்ந்து புகார்கள் அளிக்கப்பட்டன. குறிப்பாக, நிர்வாகத்தில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி அளிக்கப்பட்ட புகார்கள் குறித்து துறை ரீதியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து, புகார்களின் அடிப்படையில் விசாரணை நடத்திய தூத்துக்குடி இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ரோஜாலி சுமதா, பொது நலன் கருதி சிவன் கோயில் நிர்வாக அலுவலர் தமிழ்ச்செல்வியை தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
மேலும், சிவன் கோயில் நிர்வாக அலுவலரின் கூடுதல் பொறுப்பை குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் நிர்வாக அலுவலர் கவனிப்பார் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியின் முக்கிய ஆன்மிகத் தலங்களில் ஒன்றான சிவன் கோயிலின் நிர்வாக அலுவலர் மீது எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை கோயில் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.