தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளிலும் 100 சதவீத கழிவு சேகரிப்பு மற்றும் 100 சதவீதம் கழிவுகளை தரம் பிரித்தல் என்ற இலக்கை அடையும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களும் திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி, தங்கள் இடங்களில் உருவாகும் கழிவுகளை உருவாகும் இடத்திலேயே மக்கும் கழிவு, மக்காத கழிவு, மறுசுழற்சி கழிவு மற்றும் அபாயகர கழிவு என நான்கு வகைகளாக தரம் பிரித்து, தினசரி வீடுதோறும் வரும் தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
கழிவுகளை தரம் பிரிக்காமல் வைத்திருக்கும் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களிலிருந்து கழிவுகள் சேகரிக்கப்பட மாட்டாது என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், இதனை நடைமுறைப்படுத்தும் வகையில் மாநகராட்சி சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், பரப்புரையாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் அடங்கிய குழுவினர் வீடு வீடாக நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த ஆய்வின்போது, வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் கழிவுகள் மூலத்திலேயே முறையாக தரம் பிரிக்கப்பட்டுள்ளதா என்பது சரிபார்க்கப்படுவதுடன், பொதுமக்களுக்கு கழிவு மேலாண்மை தொடர்பான விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும், கழிவுகளை தரம் பிரிக்காமல் வைத்திருப்பது, பொது இடங்களில் குப்பைகளை கொட்டுவது, மழைநீர் வடிகால்களில் கழிவுகளை போடுவது உள்ளிட்ட விதிமீறல்கள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது சுகாதாரப் பிரிவு மூலம் அபராதம் விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சியின் தூய்மை மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் இப்பணிகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், ஆய்வுக்கு வரும் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடாமல், கழிவுகளை முறையாக தரம் பிரித்து வழங்கி மாநகராட்சியின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
“தூய்மையான தூத்துக்குடி – அனைவரின் பொறுப்பு” என்ற நோக்கில், மாநகராட்சியின் 60 வார்டுகளிலும் திடக்கழிவு மேலாண்மை பணிகளை தொய்வின்றி செயல்படுத்த பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.