தாராபுரம் இடைத்தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தேர்தல் காரியாலயத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு திமுக முதன்மைச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என். நேரு தலைமை வகித்தார்.

கூட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு, தேர்தல் பணிகள், தொகுதி வாரியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், கட்சி நிர்வாகிகளின் ஒருங்கிணைப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து நடைபெற்ற ஆலோசனையில் பங்கேற்றார்.
கூட்டத்தில் தேர்தல் களப்பணிகளை தீவிரப்படுத்துவது, வாக்காளர்களை நேரில் சந்தித்து கட்சியின் கொள்கைகள் மற்றும் அரசின் சாதனைகளை எடுத்துரைப்பது, நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை ஒருங்கிணைத்து தேர்தல் பணிகளை மேற்கொள்வது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதில் பாராளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா, முன்னாள் அமைச்சர் சுவாமிநாதன், திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் பத்மநாபன், மாவட்டக் கழக துணைச் செயலாளர் முத்துக்குமார், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தனசேகர் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் இளையராஜா, ராமசாமி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தாராபுரம் இடைத்தேர்தல் பணிகளில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் முழுமையாக ஈடுபட்டு, ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.