திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நேற்று நடைபெற்ற கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரத்தின்போது, தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிட்டு ‘அரோகரா’ என முழக்கமிட்ட சம்பவத்துக்கு வீ த லீடர் இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவின்போது, இந்து சமய அறநிலையத்துறை குழு உறுப்பினரான வேல்முருகன், தமிழக முதலமைச்சருக்கு ‘அரோகரா’, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருக்கு ‘அரோகரா’ என முழக்கமிட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
முருகப்பெருமானின் திருவிழாவையும், பக்தர்கள் எழுப்பும் பக்தி முழக்கங்களையும் அரசியல் தலைவர்களின் புகழ்பாடுவதற்குப் பயன்படுத்துவது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல. இறைவழிபாட்டுக்குரிய புனிதமான நிகழ்வுகளை அரசியல் புகழ்ச்சிக்கான மேடையாக மாற்றுவது ஆன்மிக மரபுகளுக்கு எதிரான செயலாகும்.
‘அரோகரா’ என்பது முருகப்பெருமானை போற்றிப் பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் எழுப்பும் புனிதமான இறை முழக்கமாகும். முருகப்பெருமானின் திருநாமத்தை உச்சரித்து, அவரது அருளைப் பெறுவதற்காக பக்தர்கள் எழுப்பும் இந்த முழக்கத்தை அரசியல் தலைவர்களுக்காகப் பயன்படுத்துவது ஆன்மிக மரபுகளைக் கொச்சைப்படுத்தும் செயலாகும்.
மேலும், இதுபோன்ற செயல்கள் முருகப்பெருமானை வழிபடும் கோடிக்கணக்கான பக்தர்களின் மத உணர்வுகளையும், நம்பிக்கைகளையும் புண்படுத்தக்கூடியதாகும். குறிப்பாக, சூரசம்ஹாரம் போன்ற மிக முக்கியமான ஆன்மிக நிகழ்வின்போது இதுபோன்ற அரசியல் புகழ்ச்சி முழக்கங்கள் எழுப்பப்படுவது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டியதாகும்.
இந்து சமய அறநிலையத்துறையின் குழு உறுப்பினராகப் பொறுப்பு வகிக்கும் ஒருவரே இத்தகைய செயலில் ஈடுபடுவது ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதது. அறநிலையத்துறையின் பொறுப்பில் இருப்பவர்கள் இந்து சமய வழிபாட்டு மரபுகளையும், பக்தர்களின் உணர்வுகளையும் மதித்து செயல்பட வேண்டுமே தவிர, அரசியல் தலைவர்களைப் புகழ்வதற்காக இறை முழக்கங்களைப் பயன்படுத்தக்கூடாது.
எனவே, பக்தர்களின் நம்பிக்கையையும், வழிபாட்டு மரபுகளையும் அவமதிக்கும் வகையிலான இதுபோன்ற செயல்கள் இனிவரும் காலங்களில் நடைபெறாமல் தடுக்க, சம்பந்தப்பட்டவர்களுக்கு தமிழக முதலமைச்சர் விஜய் உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்.
முருகப்பெருமானின் திருவிழாக்கள் முழுமையான பக்தி உணர்வுடனும், ஆன்மிக மரபுகள் காக்கப்படும் வகையிலும் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு வீ த லீடர் இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.