கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதத்தில், அப்போதைய திமுக ஆட்சியில் நிலவிய நிர்வாக அலட்சியத்தால், 66-வது SGFI தேசியப் பள்ளி விளையாட்டுப் போட்டிகளில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு வீரர்கூட பங்கேற்க முடியாத அவலநிலை ஏற்பட்டது. தற்போது அதேபோன்ற ஒரு நிலை மீண்டும் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வீ த லீடர் இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
தற்போது 2026-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்று வரும் நிலையில், 14, 17 மற்றும் 19 வயதுக்குட்பட்ட தமிழக வில்வித்தை வீரர்கள் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்பதற்கான வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
வரும் டிசம்பர் 17-ம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி நகரில் 70-வது SGFI தேசிய வில்வித்தைப் போட்டிகள் தொடங்க உள்ளன. இதற்காக தமிழக வீரர்களைத் தேர்வு செய்ய வேண்டிய மாநில அளவிலான தேர்வுப் போட்டிகளே இதுவரை நடத்தப்படவில்லை என்பது விளையாட்டு ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த நவம்பர் 2-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி ஒத்திவைக்கப்பட்ட தேர்வுப் போட்டிகளுக்கு இதுவரை புதிய தேதி அறிவிக்கப்படவில்லை. இதனால் தமிழக வீரர்களைத் தேர்வு செய்யும் பணிகள் முழுமையாக முடங்கியுள்ளன.
மேலும், மாநில அளவிலான தேர்வுப் போட்டிகளை நடத்துவது, தகுதியான வீரர்களைத் தேர்வு செய்வது, SGFI அமைப்பில் வீரர்களின் பெயர்களைப் பதிவு செய்வது, மாநில அணிக்கான விளையாட்டு சீருடைகளைத் தயாரித்து வழங்குவது உள்ளிட்ட முக்கியப் பணிகள் அனைத்தும் இன்னும் நிலுவையில் உள்ளன.
தேசிய அளவிலான போட்டிகள் தொடங்குவதற்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், இவ்வளவு முக்கியமான பணிகள் எதுவும் நிறைவு செய்யப்படாமல் இருப்பது தமிழக பள்ளி மாணவர்களின் விளையாட்டு எதிர்காலத்தையே பாதிக்கும் சூழலை உருவாக்கியுள்ளது.
கடந்த காலத்தில் ஏற்பட்ட நிர்வாகத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளாமல், மீண்டும் அதேபோன்ற அலட்சியம் தொடர்வது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மாணவர்கள் பல ஆண்டுகளாகப் பயிற்சி பெற்று, மாநில அளவிலும் தேசிய அளவிலும் சாதிக்க வேண்டும் என்ற கனவுடன் காத்திருக்கும் நிலையில், உரிய நேரத்தில் தேர்வுப் போட்டிகளை நடத்தத் தவறினால் அவர்களின் கடின உழைப்பும் திறமையும் வீணாகிவிடும் அபாயம் உள்ளது.
எனவே, தமிழக முதலமைச்சர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆகியோர் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, ஒத்திவைக்கப்பட்ட மாநில அளவிலான வில்வித்தைத் தேர்வுப் போட்டிகளுக்குப் புதிய தேதியை அறிவித்து, அவற்றை விரைந்து நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேர்வு செய்யப்பட்ட வீரர்களின் பெயர்களை SGFI அமைப்பில் உரிய காலத்திற்குள் பதிவு செய்வதுடன், தமிழக அணிக்குத் தேவையான சீருடைகள் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் தாமதமின்றி செய்து முடித்து, 70-வது SGFI தேசிய வில்வித்தைப் போட்டிகளில் தமிழக மாணவர்கள் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும்.
மாணவர்களின் விளையாட்டுத் திறமையும், எதிர்காலமும் நிர்வாக அலட்சியத்தால் முடக்கப்படக் கூடாது. 2023-ம் ஆண்டு ஏற்பட்ட நிலை மீண்டும் ஏற்படாமல் தடுத்து, தமிழக வீரர்களின் தேசிய அளவிலான பங்கேற்பை உறுதி செய்ய தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வீ த லீடர் இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.