திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக நீண்டகாலமாக நடைபெற்று வந்த சட்டப் போராட்டத்தில், தீபம் ஏற்ற அனுமதி வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததை வரவேற்று, தூத்துக்குடியில் பாரதிய ஜனதா கட்சியினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக பக்தர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரால் நீண்டகாலமாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்தன. இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்திலும் சட்டப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
இந்நிலையில், திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பை வரவேற்று, இது நீண்டகால ஆன்மீக உரிமைப் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி என பாஜகவினர் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
இதையொட்டி, தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகே பாஜகவினர் திரண்டு பட்டாசுகள் வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தொடர்ந்து, அப்பகுதியில் இருந்த பொதுமக்களுக்கும், கட்சியினருக்கும் இனிப்புகள் வழங்கினர். அப்போது முருகப்பெருமானை போற்றும் வகையில் 'அரோகரா' என பக்தி முழக்கங்களை எழுப்பி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் ஏ.எம். ராஜேஷ், மாவட்டத் துணைத் தலைவர்கள் சிவராமன், இசக்கிமுத்து, காளிராஜா, மாநில செயற்குழு உறுப்பினர் விவேகம் ரமேஷ், மாநில ஊடகப்பிரிவு செயலாளர் அன்னபூர்ணா, மண்டலத் தலைவர்கள் சண்முகசுந்தரம், லிங்கசெல்வம், அணிப்பிரிவு மாவட்டத் தலைவர்கள் ஆர். ஜெயக்குமார், வெள்ளத்தாய், சக்திவேல், பாலாஜி, ஓம் பிரபு, ஞானபிரகாசம் மற்றும் பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.