வரவிருக்கும் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, சமத்துவ மக்கள் கழகம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளில் தனித்துப் போட்டியிடும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு, தேர்தல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் கட்சியின் வேட்பாளராக வழக்கறிஞர் ஏ. அந்தோணி பிச்சை (எம்.ஏ., பி.எல்.) அறிவிக்கப்பட்டுள்ளார். திருவைகுண்டம் தொகுதியில் எஸ். ஜெபராஜ் டேவிட் (பி.இ.), திருச்செந்தூர் தொகுதியில் பி. அருண் சுரேஷ் குமார் (பி.ஏ.) ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
ஓட்டப்பிடாரம் (தனி) சட்டமன்றத் தொகுதியில் எஸ். ராஜாத்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கோவில்பட்டி தொகுதியில் வழக்கறிஞர் எம்.ஏ.எம். சகாயராஜ் (பி.ஏ., எல்.எல்.பி.), விளாத்திகுளம் தொகுதியில் பி. கண்டிவேல் ஆகியோரும் கட்சியின் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இவ்வாறு அறிவிக்கப்பட்ட அனைத்து 6 தொகுதிகளுக்கும் வேட்பு மனுக்கள் இன்று பெறப்பட்டுள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். வருகிற ஏப்ரல் 4ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு, சம்பந்தப்பட்ட தொகுதிகளின் ஆர்டிஓ அலுவலகங்கள் மற்றும் தாலுகா அலுவலகங்களில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர்தலில் சமத்துவ மக்கள் கழகம் தனித்துப் போட்டியிடும் முடிவால், தூத்துக்குடி மாவட்ட அரசியல் களத்தில் புதிய திருப்பம் உருவாகும் என அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன. கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இணைந்து, வெற்றிக்காக தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்