தூத்துக்குடி மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க வைகுண்டபதி பெருமாள் மற்றும் ஸ்ரீசங்கர ராமேஸ்வரர் திருக்கோவில்களில் தெருநாய்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், பக்தர்களுக்கு ரேபிஸ் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக இந்து முன்னணி கவலை தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் K.S. ராகவேந்திரா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
தூத்துக்குடியின் பிரதான ஆன்மீகத் தலங்களாக விளங்கும் வைகுண்டபதி பெருமாள் மற்றும் சங்கர ராமேஸ்வரர் கோவில்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். சமீபகாலமாக, கோவில் வளாகம் மற்றும் வெளிப்பிரகாரங்களில் தெருநாய்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் அதிகரித்துள்ளது. கூட்டமாகத் திரியும் இந்த நாய்கள், கோவிலுக்கு வரும் முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளைத் துரத்திக் கடிக்க முயல்வதால் பக்தர்கள் பெரும் அச்சத்துடன் வந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
ரேபிஸ் நோய் அபாயம்:
தெருநாய்கள் முறையாகக் கட்டுப்படுத்தப்படாமலும், அவற்றுக்குத் தடுப்பூசிகள் செலுத்தப்படாமலும் இருப்பதால், ஒருவேளை நாய் கடித்தால் உயிருக்கே ஆபத்தான ரேபிஸ் (Rabies) நோய் பரவும் சூழல் நிலவுகிறது. தூய்மையாகப் பராமரிக்கப்பட வேண்டிய கோவில் பிரகாரங்களில் நாய்கள் அசுத்தம் செய்வதால் சுகாதாரம் சீர்கெட்டு, ஆன்மீகச் சூழலும் பாதிக்கப்படுகிறது.
ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்து, பக்தர்களின் உயிருக்கு பாதிப்பு ஏற்படும் முன்பாக மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். தெருநாய்களைப் பிடித்து அப்புறப்படுத்துவதுடன், அவற்றுக்கு உரிய கருத்தடை மற்றும் தடுப்பூசி பணிகளை மேற்கொள்ள வேண்டும்," என ராகவேந்திரா வலியுறுத்தியுள்ளார்.
கோவில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் பக்தர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, உடனடியாக இந்தத் தெருநாய் தொல்லைக்குத் தீர்வு காண வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.