தமிழக அரசு கேபிள் ஒளிபரப்பிலிருந்து பாலிமர் தொலைக்காட்சி, நியூஸ் தமிழ் 24x7 மற்றும் ஜனம் தமிழ் தொலைக்காட்சி ஆகியவை நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து முன்னாள் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"அரசு கேபிள் நிறுவனம், செட்டாப் பாக்ஸ் நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை காரணமாக இந்தத் தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், கட்டணப் பிரச்சினைதான் காரணம் என்றால் ஏன் மற்ற தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பது கேள்விக்குறியாக உள்ளது.
குறிப்பாக, இந்த மூன்று ஊடகங்களும் மின்வெட்டு, நிர்வாகக் குறைபாடுகள் மற்றும் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இதன் காரணமாகவே அரசு பழிவாங்கும் நோக்கில் செயல்படுகிறதோ என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ஜனநாயக அமைப்பில் கருத்து சுதந்திரமும், ஊடக சுதந்திரமும் பாதுகாக்கப்பட வேண்டும். அரசை விமர்சிக்கும் செய்திகளை ஒளிபரப்பும் ஊடகங்களைத் தடை செய்வது ஜனநாயகத்திற்கு ஏற்ற நடைமுறை அல்ல.
எனவே, அரசு கேபிள் நிறுவனத்திலிருந்து நீக்கப்பட்டுள்ள பாலிமர் தொலைக்காட்சி, நியூஸ் தமிழ் 24x7 மற்றும் ஜனம் தமிழ் தொலைக்காட்சி ஆகியவற்றை உடனடியாக மீண்டும் ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும்" என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.